சாந்தன் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

சாந்தன் என அழைக்கப்படும் சுசேந்திரராஜா தம்மை விடுவிக்கக் கோரி 4 பக்கங்கள் அடங்கிய கடிதத்தை சட்டத்தரணியூடாக அனுப்பியுள்ளார்.

ராஜிவ் காந்தி கொலை சதித்திட்டத்தோடு இந்தியாவிற்குள் நுழையவில்லை எனவும், அவுஸ்திரேலியாவிற்கு செல்வதே தமது நோக்கமெனவும் அவர் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளதாக தமிழக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இலங்கையில் தம்மீது எந்த குற்ற வழக்குகளும் இல்லை எனவும் சாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்வதேச அளவில் பிரபலமான ஒரு தலைவரை கொலை செய்வதற்கு திட்டமிடும் எவரும், தம்மை பற்றிய உண்மையான தகவல்கள் அடங்கிய கடவுச்சீட்டை கொண்டு வருவார்களா எனவும் சாந்தன் தனது கடிதத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.

தமக்கு 2011 ஆம் ஆண்டு மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட போது, நோயாளியான தனது தந்தை, தூக்குத் தண்டனை இரத்து செய்யப்பட்ட தகவலை அறிவதற்கு முன்னரே இறந்து விட்டதாகக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வயோதிபத் தாயாருக்காவது மகனுக்கான கடமைகளை செய்ய விரும்புவதாக சாந்தன் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய உறவுகளுடன் தன்னை சேர்த்து வைக்க மத்திய அரசால் முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சாந்தனின் தாயார் மகேஸ்வரி அண்மையில் இலங்கையிலிருந்து இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர், முதல்வர், சட்ட அமைச்சர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

தனக்கு 72 வயதாவதாகக் குறிப்பிட்டுள்ள மகேஸ்வரி, 27 ஆண்டுகளாக தன் மகனைப் பார்க்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தன் இறுதிக்காலத்தில் தன்னை பராமரிக்கவாவது மகனைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு மன்றாடி வேண்டிக்கொள்வதாக மகேஸ்வரி கடிதத்தில் உருக்கத்துடன் கோரியுள்ளார்.

Sharing is caring!