சிறுவர்கள் சிக்கித்தவித்த ‘தாம் லுவாங்’ குகையை அருங்காட்சியகமாக மாற்ற முயற்சிகள்

தாய்லாந்தில் சிறுவர்கள் சிக்கித்தவித்த ‘தாம் லுவாங்’ குகையை அருங்காட்சியகமாக மாற்றவும், மீட்புக் குழுவின் தைரியமான மீட்புப் பணிகளை திரைப்படமாக எடுக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் கடந்த மாதம் 23 ஆம் திகதி குகைக்குள் சிக்கிக்கொண்டனர்.

குகையில் 17 நாட்களாக சிக்கித்தவித்த அவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு சியாங் ராய் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உலகின் கவனத்தை ஈர்த்த தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாக மாற்றப்படவுள்ளதென சிறுவர்களை மீட்ட குழுவின் தலைவர் நரோங்சாக் ஒசோட்டனகோர்ன் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணியின் போது பயன்படுத்தப்பட்ட பல நவீன கருவிகள், பிரத்தியேக ஆடைகள் போன்றவை அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும், சிறுவர்கள் குகையில் சிக்கிக்கொண்டது முதல் பத்திரமாக மீட்கப்பட்டது வரையிலான தருணங்களை திரைப்படமாக எடுக்கவுள்ளதாக பியூர் ப்ளிக்ஸ் எனும் படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தாம் லுவாங் குகை அருங்காட்சியகமாக மாறும் பட்சத்தில், தாய்லாந்து நாட்டின் சிறப்பு மிக்க இடங்களில் இதுவும் ஒன்றாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.

Sharing is caring!