சிறு தொழில் செய்வோருக்கு சிறப்பான திட்டம்… பிரதமர் பேச்சு

புதுடில்லி:
சிறு தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தொழில் கடன் வழங்க, தனி இணையதளம் உருவாக்கப்பட உள்ளது. இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிப்போருக்கு, 59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை, கடன் வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், 59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை கடன் உதவி வழங்கும் திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். மேலும், தொழிலாளர் சட்டங்களில் தளர்வு, கம்பெனி சட்டங்களில் மாற்றம் உட்பட, தீபாவளி பரிசாக, பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.

டில்லியில் நடந்த, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி செலுத்தும், குறு மற்றும் சிறு தொழில் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு தொழில் கடன் வழங்க, தனி இணையதளம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிப்போருக்கு, 59 நிமிடங்களில், 1 கோடி ரூபாய் வரை, கடன் வழங்கப்படும். ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நிறுவனங்கள் வாங்கியுள்ள, 1 கோடி ரூபாய் வரையிலான கடன் தொகை மீதான வட்டியில், 2 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம், 3 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக உயர்த்தப்படும். இனி, தொழிற்சாலை ஆய்வாளர்கள், அவர்கள் விருப்பப்படி ஆய்வு நடத்த முடியாது.

‘கம்ப்யூட்டர்’ மூலம், அவர்களுக்கு ஒதுக்கப்படும் தொழிற்சாலைகளில் மட்டுமே ஆய்வு நடத்த வேண்டும். குறு மற்றும் சிறு தொழில் முனைவோர், தொழிற்சாலைகள் அமைக்க தேவையான சுற்றுச்சூழல் அனுமதிக்கான சட்டதிட்டங்கள், எளிமையாக்கப்பட உள்ளன.

சிறிய தொழிற்சாலைகள், ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு தாக்கல் செய்யும்படி, தொழிலாளர் சட்டம் தளர்த்தப்படும். கம்பெனி சட்டத்தின் கீழ், சிறிய குற்றங்களுக்கான அபராத தொகையை குறைக்க, சட்ட திருத்தம் செய்யப்படும். இந்த புதிய மாற்றங்கள், சிறு தொழில் செய்வோர் வாழ்வில், வரலாற்று சிறப்புமிக்கதாக இருக்கும்; இது, தொழில்முனைவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு, மத்திய அரசின் தீபாவளி பரிசு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!