சிறையில் இருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்

லிபிய தலைநகர் திரிபோலி நகரில் ஆயுதக் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வரும் வன்முறைகளில் அங்குள்ள சிறையில் இருந்து சுமார் 400 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

அயின் சாரா சிறையில் இருந்து கைதிகளுக்கு கதவுகளை திறந்து தப்பிச் செல்ல முடிந்திருப்பதாக உள்ளூர் பொலிஸார் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கைதிகளுக்கு இடையே கலவரம் ஏற்பட்டபோது காவலர்கள் தமது உயிருக்கு அஞ்சியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதக் குழுக்களுக்கு இடையே தலைநகரில் ஏற்பட்ட மோதலை அடுத்து அங்கு இயங்கும் ஐ.நா ஆதரவு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது.

ஆண் கைதிகள் மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டிருந்த அந்த சிறையில் இருக்கும் போட்டி குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்ததை அடுத்தே கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சிறையில் பெரும்பாலும் பதவி கவிழ்க்கப்பட்ட காலஞ்சென்ற முன்னாள் தலைவர் முஅம்மர் கடாபி ஆதரவாளர்களே சிறை வைக்கப்பட்டுள்ளனர். 2011 ஆம் ஆண்டு அரசுக்கு எதிரான கிளர்ச்சியின் போது கொலைக் குற்றச்சாட்டுக்கு இவர்கள் உள்ளாகி இருந்தனர்.

Sharing is caring!