சீர்காழியில் பலத்த மழையால் வெள்ளம் போல் தேங்கி நின்ற தண்ணீர்

சீர்காழி:
சீர்காழியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடைவீதியில் வெள்ளம் போல் தேங்கி நின்ற தண்ணீரால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை உருவானது.

தமிழகத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்க முடியாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்ததால் அணைகள் நிரம்பி உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டெல்டா விவசாய பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்த காவிரி கால்வாய்களில் திறந்து விடப்பட்டு வருகிறது. கடை மடை பகுதிக்கு காவிரி நீர் சென்ற நிலையில் நாகை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், திருமுல்லைவாசல், வைத்தீஸ்வன் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில் சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

சீர்காழி காமராஜ் வீதியில் மழை வெள்ளம் தேங்கியது. இதனால் அப்பகுதியில் நடந்து செல்ல முடியாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் சிரமப்பட்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!