சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்திருப்பதோடு 1,400க்கும் அதிகமானவர்கள் காயம்

முன்னெச்சரிக்கை இன்றி இந்தோனேசிய தீவுகளை கடந்த சனிக்கிழமை தாக்கிய சுனாமி பேரலையால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 429 ஆக அதிகரித்திருப்பதோடு 1,400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேற்கு ஜாவா மற்றும் தெற்கு சுமத்ராவின் கடற்கரை பகுதிகளில் உள்ள வீடுகளை சுனாமி அடித்துச் சென்றதால் ஆயிரக்கணக்கானவர்கள் வீடற்றவர்களாக மாறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் உயிரிழப்பு 429 ஆக அதிகரித்திருப்பதோடு குறைந்தது 128 பேர் காணாமல்போயிருப்பதாக அனர்த்த முகாமை பேச்சாளர் சுடோபோ புர்வோ நுக்ரோஹோ குறிப்பிட்டார்.

நீண்ட கடற்கரை ஓரங்களில் இடிபாடுகளில் துருப்புகள், தன்னார்வ தொண்டர்கள் நேற்றும் தேடுதலில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள் மீட்கப்பட்டு, சடலங்கள் பைகளில் சேர்க்கப்படும்போதும் அருகில் இருக்கும் உறவினர்கள் அழுது கொண்டிருக்கும் நிகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணையில் உள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நீருக்கடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அனாக் க்ரகடோவா தீவில் எரிமலை வெடித்ததால், அது ஒரு புதிய சுனாமியை உருவாக்கக்கூடும் என்று அப்பகுதிக்கு அருகில் உள்ள கடலோர மக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்களை கடலோர பகுதிகளில் இருந்து உள்பகுதிகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் அனாக் க்ரகடோவா தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளின் காரணமாக அப்பகுதிகள் புகைமண்டலமாக காட்சியளித்தது.

“எங்கும் இடிபாடுகள் சிதறிக்கிடக்கின்றன. இடிந்த கார்கள், நொருங்கிய மோட்டார் சைக்கில், கட்டட இடிபாடுகளையே எல்லா இடங்களிலும் காண முடிகிறது” என செஞ்சிலுவை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கட்டடச் சிதைவுகள் கனரக இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்படுகின்றன. கனமழை காரணமாகவும் குறைவான தூரமே பார்க்கக்கூடிய சூழல் காரணமாகவும் மீட்புப் பணிகள் தாமதமடைந்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.

இடிபாடுகளில் சிக்கிய மக்களை மீட்க ஆளில்லா விமானங்கள், மோப்ப நாய்களும் உதவி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதிகளுக்கு அத்தியாவசியத் தேவைப் பொருள்கள் சென்று சேர்ந்துள்ளன. இருப்பினும், சுத்தமான தண்ணீரும், மருந்துப் பொருட்களும் வேகமாகக் குறைந்துவருவதாக மனிதநேய உதவியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆயிரக் கணக்கானோர் தற்காலிகத் தங்குமிடங்களில் உதவி நாடிக் குவிந்துள்ளது அதற்குக் காரணமாகும். பொதுச் சுகாதார நெருக்கடி நேரலாம் என்ற அச்சமும் நிலவுகிறது.

தற்போது அனாக் க்ரகடோவா எரிமலை தொடர்ந்து சாம்பலைக் கக்கி வருகிறது.

Sharing is caring!