சென்டினலீஸ் மற்றும் ஜராவா பழங்குடியினரை தொடர்புகொண்ட முதல் இந்திய பெண்மணி

தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் அந்தமானில் உள்ள சென்டினலீஸ் மற்றும் ஜராவா பழங்குடியினரை நேரடியாக தொடர்புகொண்ட முதல் இந்திய பெண்மணி மதுமாலா சட்டோபத்யாய் என்பது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் சென்டினல் தீவுக்கு செல்ல முயன்று, அங்குள்ள பழங்குடியினரால் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். இந்த நிலையில் ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த பெண் ஒருவர் சென்டினல் தீவுக்கு சென்று வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த 1991-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி, ஒரு இளம் இந்திய பெண் மானுடவியலாளர், அந்தமான் சென்டினலின் தீவில் தரையிறங்கி சென்டினீஸ் பழங்குடியினர் ஒருவரிடம் தான் கொண்டு வந்த தேங்காயை ஒப்படைக்க பவளப்பாறைகளுக்குள் இறங்கிய தகவல் வெளியாகி உள்ளது.

உயிருக்கு உத்தரவாதமில்லாத இந்த செயலில் ஈடுபட்ட அந்த இளம்பெண் பெயர் மதுமாலா சட்டோபத்யாய். இவர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பழங்குடியினரைப் பற்றி பயின்று, இந்தியாவின் ஆன்ட்ரோபாலஜிக்கல் சர்வேயின் மனிதவியல் ஆராய்ச்சியாளராக பணியாற்றியவர்.

சுமார் 60,000 ஆண்டுகளுக்கு மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினரை தொடர்பு கொள்ள 1880-ம் ஆண்டில், மாரிஸ் போர்ட்மேன், என்னும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் முதல் முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்து ஒரு வயதான தம்பதியரையும் நான்கு குழந்தைகளையும் கைப்பற்றி, அந்தமானின் போர்ட் பிளேயருக்கு அழைத்து வந்தார்.

ஆனால், சிறைச்சாலையிலேயே அந்த வயதான தம்பதியினர் இறந்துவிட்டதால், பிரிட்டிஷ் அதிகாரிகள், அந்த நான்கு குழந்தைகளையும் சென்டினல் தீவுக்கே திருப்பி அனுப்பிவைத்தனர்.

ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, 1970 களின் ஆரம்பத்தில் இந்தியாவின் மானுடவியல் ஆய்வு மற்றும் நேஷனல் ஜியோகிராபிக் மூலம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பழங்குடியினரின் அம்புகள் தாக்குதல்கள் காரணமாக அவர்களின் முயற்சி தோல்வி அடைந்தது.

இந்த நிலையில்தான் மானுடவியல் ஆராய்ச்சியாளர் மதுமாலா சட்டோபத்யாய் சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார். கடந்த 1991 ம் ஆண்டு ஜனவரி 4-ந்தேதி எம்.வி. தார்முக்லி என்ற கப்பல் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடி மக்கள் வாழும் பகுதியான வடக்கு சென்ட்டினெல் தீவின் தென்கிழக்கு பகுதிக்கு ஒரு குழுவினர் சென்றனர். மதுமாலாவும் அந்த குழுவில் சென்றார். அந்த குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண், மானுடவியல் ஆராய்ச்சியாளர் மதுமாலா சட்டோபத்யாய் தான்.

இவர் அந்த பகுதிக்கு சென்ற முதல் நாளில், அங்குள்ள பழங்குடியினருக்கு தேங்காய் போன்ற ஒருசில பொருட்களை அன்பளிப்பாக அளித்தார். சில பழங்குடி ஆண்கள் அதை பெற்றுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து 2வது நாள் பழங்குடியினர் போலவே பவளப்பறைக்குள் இறங்கி சென்ற மதுமாலாவிடமிருந்து நேரடியாகவே ஒரு பழங்குடி மனிதன் தேங்காய் பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து பழங்குடி மக்களை அணுகுவதில் தாம் வெற்றி பெற்றதாக நினைத்த மதுமாலா மற்றொருவரால் தான் குறிவைக்கப்படுவதை அறியவில்லை.

இந்த நிலையில், மற்றொரு பழங்குடியினர் அவர்மீது அம்பை எய்ய, அதிர்ஷ்டவமாக, அந்த அம்பு மற்றொரு பெண் பழங்குடியால் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக மதுபாலா அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அதைத்தொடர்ந்து அந்த குழுவினர் அங்கிருந்து உடனடியாக கிளம்பினர்.

இதையடுத்து, 1991 பிப்ரவரி 21-ம் தேதி மதுமாலா மறுபடியும் அந்த தீவுக்குள் செல்கிறார். தற்போது அவருக்கு சற்று தைரியம் ஏற்பட்டுள்ளது. அதன்கரணமாக ஏராளமான பரிசு பொருட்களுடன் சென்ற இவரது படகில் ஏறிய சென்டினலீஸ், அவரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். அதைத்தொடர்ந்து அங்குள்ள மக்களிடம் உரையாடியவர், அங்குள்ள பழங்குடியின குழந்தைகளை தூக்கியும் கொஞ்சினார். இந்த முறை அவர் எந்தவித தாக்குதலுக்கும் உள்ளாகவில்லை என்பது வியப்பை ஏற்படுத்தியது.

ஜாரவாஸ் இனத்தினருடனான தொடர்பு …

இதற்கிடையில், மதுமாலா மற்றொரு அந்தமான் பழங்குடி இனமான, ஜாரவாஸ், மீது கவனம் செலுத்தி வந்தார். அதே 1991-ம் ஆண்டு மற்றொரு ஆராய்ச்சியாளர் குழுவோடு மதுமாலா ஜாரவாஸ் மக்கள் வாழும் பகுதிக்கு சென்றார்.

இவரை கண்டதும், ஜாரவாஸ் இனத்தை சேர்ந்த ஒரு பெண் “மிளாலே சேரா” என்று இவரை பார்த்து அழைக்கிறார். “மிளாலே சேரா” என்றால் அவர்கள் பாஷையில் ‘பிரண்ட் கம் ஹியர்’ என்று அர்த்தமாம்.

கப்பல் கரையை நெருங்கியதும், ஐந்து ஜாரவா ஆண்கள் படகில் ஏறினர். சிறு தவறான செய்கையும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று அறிந்த மதுமாலாவும் குழுவினரும் செய்வதறியாது அமைதியாக இருந்தனர். அப்போது, ஜாரவா பெண் ஒருவர் படகில் ஏறி மதுமாலா அருகில் அமர்ந்து, இவரும் தன்னை போல ஒரு பெண், என்று ஜாரவா ஆண்களுக்கு செய்கையில் புரியவைத்தார். தனது நட்பின் வெளிப்பாடாக மதுமாலா அந்த பெண்ணைத் தழுவிக்கொண்டார்.

எந்த மானுடவியல் உரை புத்தகமும் இதை அவருக்கு கற்றுக் கொடுக்கவில்லை. அவரது அனுபவம், பச்சாத்தாபம் மற்றும் சுய பாதுகாப்பு உணர்வே இந்த நேசத்தை கற்றுக் கொடுத்ததாக அவர் கூறினார்.

பின்னர், மதுமாலா அடிக்கடி ஜாரவா பகுதிக்கு சென்று அம்மக்களுடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார். அவர் ஜராவா குடிசைகளுக்கு சென்று, குழந்தைகளுடன் விளையாடுவது, அவர்களுடன் உணவுகளை பகிர்ந்துகொள்வது, சில நேரங்களில் வீட்டு வேலைகலில் உதவி செய்வது வழக்கமானது.

ஜாரவாஸ் மக்களுடன் இரவு தங்குவதற்காக மதுமாலா தனது நிர்வாகத்திடம் அனுமதி கோரினார். ஆனால், பாதுகாப்பு கருதி அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

ஆஞ்ஜ் மற்றும் கார் நிக்கோபாரிஸ் பழங்குடியினர் …

சென்டினலீஸ், ஜாரவாஸ் மக்களோடு மட்டும் நின்று விடாமல், மதுமாலா ஆஞ்ஜ் மற்றும் கார் நிக்கோபாரிஸ் பழங்குடியினர் மத்தியிலும் பணிபுரிந்துள்ளார்.

தனது ஆன்ட்ராபலாஜிகல் ஆராய்ச்சியின் அங்கமாக ஆஞ்ஜ் பழங்குடி மக்களின் ஆரோக்கிய நிலைமையை பரிசோதிக்க அவர்களது இரத்த மாதிரிகளையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப் பட்டார். ஆஞ்ஜ் இனத்தினரால் இவர் ‘டெபோடோபேட்டி’ (Debotobeti – Doctor) என்றெ அழைக்கப்பட்டார்.

தங்களோடு வந்து பணியாற்றுமாறு பல ஆராய்ச்சி பல்கலைக்க ழகங்கள் இவருக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அனால், இவரின் இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் வயதான தாயின் மீது கவனம் செலுத்துவதற்காக அந்த பொறுப்புகளை மதுமாலா நிராகரித்து விட்டார்.

தற்போது, இவர் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தில் மூத்த ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

அவரது ஆராய்ச்சி, “கார் நிகோபார் பழங்குடிகள்” என்ற தலைப்பின் கீழ் வெளியிடப்பட்டது.

Probashionline.com இன் குழுவிடம் சமீபத்தில் பேசிய மதுமாலா, “என்னுடைய ஆறு ஆண்டுகால பழங்குடியினருடனான ஆராய்ச்சி பணியில், அம்மக்கள் ஒருபோதும் என்னுடன் தவறாக நடந்ததில்லை. பழங்குடியினர் தங்கள் தொழில்நுட்ப சாதனைகளில் பழமையானவர்களாக இருக்கலாம், ஆனால் ஒரு நல்ல சமூகமாக அவர்கள் நம்மை விட முன்னேறி இருக்கிறார்கள்,” என்று கூறினார்.

தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால், மறுபடியும் அந்தமான் தீவுகளுக்கு சென்று அவர்களை பார்க்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சென்டினலீஸ் பழங்குடியினரை காண வெளிநாட்டினர் ஆர்வம் கொண்டு அதிக அளவில் வருவதால், குறைந்த மக்கள் தொகையை கொண்ட அந்த மக்களுக்கு மற்றவர்களால் தொற்று நோய் பரவும் சாத்தியக்கூறுகள் இருப்பதை சுட்டிக்காட்டி, இந்திய அரசாங்கம் அந்த பகுதிக்கு செல்ல தடை விதித்துள்ளது.

Sharing is caring!