செம பார்முலா… தெலுங்கானாவில் பெரும்பான்மை இடத்தை பிடித்த சந்திரசேகர ராவ்

ஐதராபாத்:
செம பார்முலாவை முன் வைத்து தெலுங்கானாவில் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறார் சந்திரசேகர ராவ்.

தெலுங்கானா மாநிலத்தில், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு, அக்கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் கையாண்ட, ‘பைசா, ஷாதி, மக்கான், பானி’ பார்முலா தான் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.

பைசா என்றால், பணம்; ஷாதி என்றால் திருமணம்; மக்கான் என்றால் வீடு; பானி என்றால் தண்ணீர் என்று அர்த்தம்.

நாடு முழுவதும் விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்னை விளைச்சலுக்கு தகுந்த வருவாய் இல்லாதது தான். இப்பிரச்னையை சமாளிக்க, மத்திய அரசும், பிற மாநில அரசுகளும் குறைந்தபட்ச ஆதார விலை அல்லது மறைமுக மானிய உதவி திட்டங்கள் தான்.

ஆனால், சந்திரசேகர ராவ் ஒரு பருவத்திற்கு ஒரு ஏக்கருக்கு ரூ.4,000 தந்தார். தெலுங்கானாவில், ராவி, காரீப் என இரண்டு பருவங்கள் உள்ளன. ஒரு ஏக்கர் இருந்தால் ஆண்டுதோறும், ரூ.8,000 கிடைக்கும். ஒரு விவசாயி ஐந்து ஏக்கர் வைத்து இருந்தால், ஒரு ஆண்டுக்கு ரூ.40,000 கிடைக்கும். இதன் மூலம் தெலுங்கானா விவசாயிகள் பெரிதும் பலன் அடைந்தனர்.

சந்திரசேகர ராவ், ‘ கல்யாண் லட்சுமி அல்லது ஷாதி முபாரக் (முஸ்லிம் குடும்பங்களுக்கு) என்ற திருமண உதவி திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். ஒருவர் திருமணம் செய்து கொண்டால் இந்த திட்டத்தின் கீழ் ரூ.10,000 வழங்கப்படும். இது தெலுங்கானாவில் மிகவும் பிரபலமானது.

இதுதவிர ஒவ்வொரு குடும்பத்திலும், முதியோர், மாற்றுத்திறனாளி, விதவை என யாராவது ஒருவர் இருக்க வாய்ப்பு உண்டு. சந்திரசேகர ராவ் அவர்களுக்கு நேரடி பென்ஷன் தொகை கொடுத்தார்.

அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை பிரதமர் மோடி முன்னிலைப்படுத்தினார். ஆனால் சந்திரசேகர ராவ், ஏழை குடும்பங்களுக்கு இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்தார். இந்த வாக்குறுதி இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்றாலும், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானம் துவங்கி விட்டது.

இது ஏழை குடும்பங்களுக்கு தங்களுக்கு எப்படியும் ஒரு வீடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுதவிர இந்த வீடுகளுக்கு 24 மணி நேர மின்சார வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் எனவும் சந்திரசேகர ராவ் உறுதி அளித்துள்ளார்.

மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சுத்தமான, குடிநீர் வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் மக்களை திருப்திபடுத்தி உள்ளது.
இது போன்ற அதிரடி சலுகைகளால் சந்திரசேகர ராவின் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த கட்சி கடந்த முறையை விட 29 தொகுதிகளை கூடுதலாக பெற்றுள்ளது. மொத்தம் 119 தொகுதிகளில் 92 இடங்களை கைப்பற்றி பெரும்பலத்துடன் ஆட்சியில் ராவ் அமர்கிறார். இந்த பார்முலாதான் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் மீண்டும் அதிக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வழி செய்துள்ளது என்று அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!