ஜனவரி மாதத்தில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் தூக்கிலிடப்பட்டார்.

பாகிஸ்தானில் இவ்வருடம் ஜனவரி மாதத்தில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட நபர் இன்று (17) தூக்கிலிடப்பட்டார்.

சைனப் அன்சாரி எனும் அந்த சிறுமியின் உடல் குப்பை கொட்டும் இடத்தில் கண்டறியப்பட்டபின் கைது செய்யப்பட்ட இம்ரான் அலி எனும் நபர், லாகூரில் உள்ள கோட் லாக்பத் சிறைச்சாலையில் இன்று காலை தூக்கிலிடப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சைனப்பின் தந்தை மற்றும் பிற உறவினர்கள் அங்கு இருந்துள்ளனர்.

இம்ரான் அலி தூக்கிலிடப்படும் காட்சியை நேரில் பார்த்ததாகக் கூறிய சைனப்பின் தந்தை அமீன் அன்சாரி, அந்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் முன்பு இம்ரான் அலியை தூக்கிலிட வேண்டும் என்று அமீன் தாக்கல் செய்த மனுவை லாகூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டமை பாகிஸ்தான் முழுவதும் பெரும் போராட்டங்களைத் தூண்டியது. அந்தப் போராட்டங்களின் போது ஏற்பட்ட கலவரங்களில் இருவர் உயிரிழந்தனர்.

CCTV கெமராவில் சைனப் கடத்தப்படும் காட்சி பதிவாகியிருந்ததுடன், அதுவே இந்த வழக்கின் பிரதான சாட்சியாக எடுத்துக்கொள்ளப்பட்டது.

Sharing is caring!