டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த பேச்சுவார்த்தை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்களன்று நடைபெறும்.

“பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும்” என வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக வெள்ளியன்று அமெரிக்கா, 12 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டிய பிறகு பேச்சுவார்த்தைக்கு பல எதிர்ப்புகள் எழுந்தன.

இந்த பேச்சுவார்த்தையை எதிர்பார்ப்பதாக ரஷ்யாவும் தெரிவித்துள்ளது.“பேச்சுவார்த்தை நடத்துவதற்குரிய கூட்டாளியாக டிரம்பை கருதுகிறோம். இருநாடுகளுக்குமான உறவு மோசமான நிலையில் உள்ளது. எனவே அதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்க வேண்டும்” என க்ரெம்ளின் அலோசகர் யூரி உஷகோவ் தெரிவித்தார்.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய அதிகாரிகள் தலையிட்டதாக அமெரிக்கா தெரிவித்த பிறகு இருநாடுகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நிலவியது.

“அந்த குற்றச்சாட்டுகள் சதித்திட்டங்களின் குவியல்” என்றும் , திங்களன்று நடைபெறவிருக்கும் “பேச்சுவார்த்தைக்கு முன்னர் சூழலை கெடுக்கும் நோக்கத்தில் கூறப்படும் குற்றச்சாட்டுகள்” என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் 12 அதிகாரிகள் அமெரிக்க தேர்தலில் தலையிட்டனர் என்பதற்கான ஆதரங்கள் ஏதும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“சதிகாரர்களின் திட்டம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதே” என அமெரிக்க துணை சட்டமா அதிபர் ரோட் ரோசன்ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!