தந்தைக்கு தாயான சிறுமி

சீனாவில் 6 வயது சிறுமி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தன் தந்தைக்கு உதவியாக இருந்து கொண்டு, பாடசாலைக்கும் சென்று வருவது அவள் வாழும் பகுதியைச் சேர்ந்த மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிறுமியின் தந்தை டியான் ஹாய்செங் சீனாவின் நிங்சியா மாகாணத்தைச் சேர்ந்தவர். 40 வயதான டியான், இரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் கடுமையாகக் காயமுற்றதில் அவருக்குப் பக்கவாதப் பாதிப்பு ஏற்பட்டது. சிறுமியின் தாய்க்கு தன் கணவரது பக்கவாதப் பாதிப்பை ஏற்றுக்கொள்ளும், சகித்துக்கொள்ளும் மனமில்லாத காரணத்தால் அவர் தன் கணவரையும், 6 வயதுப் பெண் குழந்தையையும் விட்டு விட்டு தன் மூத்த மகனோடு தாய் வீட்டுக்குச் சென்று விட்டார். முதலில் சில நாட்களுக்கு மட்டும் அங்கிருந்து விட்டு பிறகு கணவரது வீட்டுக்கு திரும்புவதாகச் சொன்ன மனைவி மீண்டும் திரும்பி வரவே இல்லை.

6 வயதுச் சிறுமியைக் கவனிக்கவே தனியாக ஒரு ஆள் வேண்டும். அவள் இன்னும் குழந்தை தான். ஆனால், இப்படியான சிக்கலான தருணங்கள் தான் வாழ்க்கையைத் தாங்கிக் கொள்வதற்கான மனோதிடத்தை உருவாக்கி விடுகிறது. இதில் சிறுமி ஜியாவும் விதிவிலக்கில்லை.

சிறுமி இப்போது தன் தந்தைக்கு மகளாக இல்லை தாயாக மாறி சேவை செய்து கொண்டிருக்கிறாள். காலையில் 6 மணிக்கெல்லாம் எழுந்து கொள்ளும் ஜியா எழுந்ததும் முதல் வேலையாகச் செய்து முடிப்பது பக்கவாதம் வந்த தந்தைக்குத் தேவையான மசாஜ். சுமார் அரைமணி நேரம் மசாஜ் முடிந்தவுடன் தந்தைக்கு பல் துலக்கி விட்டு முகம் கழுவித் துடைத்து சுத்தம் செய்து முடிப்பார். அதன் பின் தான் பாடசாலை செல்லும் நேரத்தில் தந்தையை வயதான தாத்தா, பாட்டிகளிடம் ஒப்படைத்து விட்டு செல்கிறார்.

பாடசாலை விட்டு வந்தது முதலே, தந்தைக்கு உணவு ஊட்டுவது, அவருக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை நேரம் தவறாமல் தருவது, வீட்டிலேயே உருவாக்கப்பட்ட தானியங்கி நாற்காலி மற்றும் மேலெழும்பியும், கீழிறக்கியும் இயக்கக் கூடிய வகையிலான தானியங்கி கம்பத்தின் மூலம் தந்தையை தூக்கி அமர வைப்பது, வீட்டைச் சுற்றி உலவச் செய்வது என மீண்டும் தன் தந்தைக்கான உதவிகளைத் தொடங்கி விடுகிறாள்.

ஜியாவின் தாத்தா, பாட்டி இருவரும் விவசாயிகள் என சீன ஊடகங்கள் தகவல் வௌியிட்டுள்ளன. அதனால், அவர்களால் முற்றிலுமாகத் தங்களது மகனை கவனித்துக்கொள்ள நேரம் ஒதுக்க முடியாததோடு, குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளுக்காக பொருளீட்டியாக வேண்டிய தேவைகளும் இருப்பதால், அவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் மகனைக் கவனித்துக்கொள்ள தங்களது சின்னஞ்சிறு பேத்தியின் உதவியை நாடுபவர்களாகவே இருக்கிறார்கள். ஆயினும், சிறுமி ஜியா இதனாலெல்லாம் சோர்ந்து போய் விடவில்லை.

தற்போது 40 வயதாகும் டியானுக்கு விபத்தில் மார்புக்கு கீழான பகுதிகளில் இயக்கமற்றுப் போய் முழுதாக இரு ஆண்டுகள் ஆகின்றன. இந்த இரண்டு ஆண்டுகளாக சிறுமி ஜியா தான் தந்தை டியானுக்கு ஒரு தாயினும் மேலான சேவைகளை அன்போடும் அக்கறையோடும் வழங்கி வருகிறாள். டியான் தன் மகள் ஜியா பெயரில் சீன சமூக ஊடகமான குவாய்ஷோவில் ஒரு கணக்குத் தொடங்கி இருக்கிறார். அதில் தன் மகள் ஜியா தனக்கு ஆற்றி வரும் சேவைகள் குறித்த காணொளியை டியான் தொடர்ந்து பதிவு செய்வது வழக்கம். குறிப்பிட்ட அந்த சமூக ஊடகக் கணக்கில் ஜியாவுக்கு 4,80,000 ஃபாலோவர்கள் இருக்கிறார்கள்.

தற்போது தன் குடும்பத்திற்கு தேவையான பொருளாதாரத் தேவைகளை இந்த இணைய ஊடகப் பதிவுகள் ஓரளவுக்கு நிறைவு செய்வதாக டியான் தெரிவித்திருக்கிறார்.

Sharing is caring!