தமிழகம் முழுவதும் ஆடிப்பெருக்கு விழா… உற்சாகத்துடன் கொண்டாட்டம்

தஞ்சாவூர்:
தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்டியது. தமிழர்களின் முக்கிய திருவிழாவாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. காவிரி கரையோரங்களில் ஆடி-18 விழா ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் மேட்டூர், சேலம், கரூர், ஈரோடு, திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உற்சாகப்படும்.

தமிழகத்தில் வளம் கொழிக்க வைக்கும் நதிகளில் ஒன்றான காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், மேலும் அனைவரது வாழ்விலும் காவிரி போல் மகிழ்ச்சியும் வளமும் பொங்கி வாழ வேண்டும் என்று காவிரிக்கு படையிலிட்டு வழிபடுவர்.

தமிழர்களின் வாழ்வோடு பின்னி பிணைந்த ஆடிப்பெருக்கு விழா இன்று தமிழகத்தில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆடிப்பெருக்கு களை இழந்து காணப்பட்டது. இந்தாண்டில் மேட்டூரில் இருந்து கடந்த மாதம் 19-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டம் கல்லணையில் 22-ந் தேதி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரி கடைமடை பகுதி வரை சென்றுள்ளதால் பொது மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு விழாகளை கட்ட தொடங்கியது. திருவையாறு புஷ்ய படித்துறையில் இன்று காலை முதலே ஏராளமான பெண்கள் புனித நீராடினர். படித்துறையில் அவர்கள் பூஜை செய்து காவிரி அன்னைக்கு ஆரத்தி எடுத்து பயபக்தியுடன் வழிபட்டனர்.

புதுமண தம்பதிகள் காவிரியில் புனித நீராடி புத்தாடை அணிந்து காவிரி ஆற்றில் மலர்களை தூவி வழிபட்டனர். மேலும் திருமணமாகாத கன்னிபெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டியும், தங்களது வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் நிலைத்திருக்க வேண்டும் என்றும் வேண்டினர்.

இதேபோல் கும்பகோணம் பக்வத் படித்துறை, பாலக்கரை, டபீர் படித்துறை, மற்றும் காவிரி கரையோரங்களில் இன்று ஆடிப்பெருக்கு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கரைகளில் பழங்கள், மலர்களை வைத்து பூஜை செய்து காவிரி தாய்க்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். இதில் திருமணமாகாத கன்னிபெண்களும் கலந்து கொண்டு வழிபட்டனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை துலா கட்டத்தில் இன்று ஆடிப்பெருக்கு வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. இதேபோல்
சீர்காழி, திருவாரூர் முள்ளியாறு, ஒடம்போக்கி, கோரையாறு, பாண்டவையாறு, பாமினி ஆற்றின் கரைகளிலும் ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் புனித நீராடி காவிரி தாயை வழிபட்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!