தாம் வெற்றி பெற்றுள்ளதாக இப்ராஹிம் மொஹமட் தெரிவிப்பு

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராஹிம் மொஹமட் சொலிஹ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அப்துல்லா யாமீனை விட 16 வீத வாக்குகளால் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

472 வாக்குப்பெட்டிகளில் இதுவரை 437 வாக்குப்பெட்டிகளின் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை எண்ணப்பட்ட முடிவுகளின்படி ஜனாதிபதி அப்துல்லா யாமீனை விட இப்ராஹிம் மொஹமட் முன்னிலையிலுள்ளதாகவும் ஊடகங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

எவ்வாறாயினும், அந்நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழு எந்தவொரு முடிவையும் இதுவரை வௌியிடவில்லை.

இதேவேளை, வாக்குகளின் இறுதி முடிவுகள் எதிர்வரும் 30 ஆம் திகதி வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாலைதீவில் நேற்று நடந்துமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன், மாலைதீவு முன்னேற்ற கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட்டார்.

அதேபோல் ஜனநாயகக் கட்சி சார்பில் இப்ராஹிம் மொஹமட் களமிறங்கினார்.

சுமார் 4 இலட்சம் மக்கள் வாழும் மாலைதீவில், இந்தத் தடவை 2,62,135 பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

472 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதுடன், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுககளிலும் தூதரகங்களிலும் வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டிருந்தன.

அத்தோடு, இம்முறை தேர்தலில் அப்துல்லா யாமினுக்கு சீனா ஒத்துழைப்பு வழங்குவதுடன், இப்றாஹிம் மொஹமட்டிற்கு இந்தியா உதவி வழங்கியது.

Sharing is caring!