தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் நலமாக இருப்பதாக ‘வீடியோ’ வெளியீடு

இந்தோனேசியாவின் குகையில் சிக்கிய சிறுவர்கள் நலமுடன் இருக்கும் புதிய, ‘வீடியோ’ வெளியாகியுள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடான, தாய்லாந்தின் மாயி சாய் நகரின், கால் பந்தாட்ட அணியைச் சேர்ந்த, 11 – 16 வயதுடைய சிறுவர்கள், 11 பேர் மற்றும் 25 வயதுடைய பயிற்சியாளர் ஆகியோர், கடந்த மாதம், 23ல், அப்பகுதியில் உள்ள, தாம் லுயாங் குகைக்கு சென்றனர். இந்த குகை, 10 கி.மீ., நீளம் உடையது.

குகைக்குள் சற்று துாரம் சென்றதும், அப்பகுதியில் பலத்த மழை பெய்யத் துவங்கியது. மழை நீர், குகையை சூழ்ந்ததால், அவர்களால் வெளியேற முடியவில்லை. மழை தொடர்ந்ததால், 10 நாட்கள் ஆகியும், அவர்களால் வெளியே வரமுடியவில்லை.

விளையாடச் சென்ற சிறுவர்கள் வீடு திரும்பாததால், அச்சப்பட்ட பெற்றோர், இது குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவல், தாய்லாந்து முழுவதும் பரவியது. தாய்லாந்து ராணுவத்துடன் சேர்ந்து, அமெரிக்க வீரர்களும், சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு வழியாக, சிறுவர்கள் குகையில் சிக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும், குகையை சூழ்ந்துள்ள மழை நீர் வடியாததால், அவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குகைக்குள் சிறுவர்கள் இருக்கும் முதல் வீடியோ, நேற்று முன்தினம் வெளியானது. இதனால், அவர்களின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். இந்நிலையில், சிறுவர்கள், 11 பேரும், தாங்கள் நலமாக இருப்பதாக கூறும், இரண்டாவது வீடியோ, நேற்று வெளியானது.
10 நாட்களுக்கும் மேலாக உணவு அருந்தாமல் உள்ள அவர்கள், மிகவும் சோர்ந்து காணப்பட்டனர். பல நாட்களாக, இருட்டான குகையில், உணவின்றி வாடும் சிறுவர்களை மீட்கும் முயற்சியில், அந்நாட்டு ராணுவம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எந்த சிரமும் இன்றி, அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என்பதற்காக, பேரிடர் மீட்பு நிபுணர் குழுவினர், பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.

Sharing is caring!