திட்டமிட்டே கொல்லப்பட்டார்

சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திட்டமிட்டே கொல்லப்பட்டார் என்கிறார் சௌதி அரேபிய அரசு வழக்குரைஞர் அல்-ஏக்பாரியா தெரிவித்துள்ளார்.

சௌதி-துருக்கி கூட்டு நடவடிக்கைப் படை அளித்த தகவல்களின் அடிப்படையில் சந்தேக நபர்கள் விசாரிக்கப்பட்டுவருவதாகவும் அவர் கூறியுள்ளார் என சௌதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று வாரங்களுக்கு முன்பு, ஜமால் கஷோக்ஜி இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு வந்து திரும்பிச் சென்றுவிட்டதாக ஆரம்பத்தில் கூறியது சௌதி.

றகு, அங்கே நடந்த ஒரு கைகலப்பில் அவர் இறந்துவிட்டார் என்று அந்நாடு கூறியது.

தற்போது அது திட்டமிட்ட கொலை என்றும் அந்நாடு ஒப்புக்கொண்டுள்ளது.

முன்னதாக, சௌதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி துருக்கியில் உள்ள சௌதி தூதரகத்தில் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்டதாக நம்பப்படும் ஆடியோவை அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இயக்குநர் ஜினா ஹேஸ்பல் கேட்டார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்தவாரத் தொடக்கத்தில் துருக்கி சென்றிருந்தபோது அந்த ஆடியோ பதிவை கேட்பதற்கு ஜினா அனுமதிக்கப்பட்டார் என்று அந்த செய்திகள் கூறுகின்றன. தாம் கேட்ட விவரங்கள் குறித்து அவர் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடம் விவரிக்க உள்ளார் என்றும் தெரியவருகிறது.

அமெரிக்காவில் வாழ்ந்து வந்த ஜமால் கஷோக்ஜி சௌதி அரசைப் பற்றி கடுமையாக விமர்சித்துவந்தவர். துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சௌதி துணைத் தூதரகத்துக்கு சென்ற அவர் திரும்பவே இல்லை. பிறகு அவர் கொல்லப்பட்டதாக செய்தி வெளியானது.

முரட்டு ஏஜெண்டுகளே இந்தக் கொலைக்கு காரணம் என்று சௌதி அரேபியா முதலில் கூறியது.

இந்த சம்பவத்தால் சௌதி அரேபியாவுக்கும் அமெரிக்காவுக்கும் உள்ள உறவில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 2-ம் தேதி நடந்த கொலைக்குப் பிறகு, அந்த கொலை சம்பவத்தின்போது பதிவு செய்யப்பட்ட ஆடியோ பதிவு தங்களிடம் இருப்பதாக துருக்கி அதிகாரிகள் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ஆனால், அந்த ஆடியோவில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றியோ, அது அவர்களுக்கு எப்படிக் கிடைத்தது என்பது பற்றியோ எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஹேஸ்பல் துருக்கி சென்றார். அவர் அந்த ஆடியோ பதிவுகளை கேட்டதாக துருக்கியில் இருந்து வெளியாகும் சபா நாளிதழ் புதன்கிழமை செய்தி வெளியிட்டது.

இப்போது, வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் மற்றும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்திகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள நபர்கள் சபா வெளியிட்ட செய்தியை உறுதி செய்கிறார்கள்.

அந்த ஆடியோ மிக உறுதியான தகவல்களைக் கொண்டிருப்பதாகவும் இந்தக் கொலைக்கு சௌதி அரேபியாவை பொறுப்பாக்கும்படி அது அமெரிக்காவை நிர்ப்பந்திக்கும் என்றும் “அந்த ஆடியோவைப் பற்றி தெரிந்த ஒருவர்” வாஷிங்டன் போஸ்டிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் சௌதியின் நிர்வாகத்தை கையில் வைத்துள்ளதாக கருதப்படும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இந்தக் கொலைக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

ஆனால், இந்த கொலை திட்டத்தை சல்மானுக்கு மிக நெருக்கமானவர்களே செயல்படுத்தியதாக துருக்கி பாதுகாப்புத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன.

சமீபத்தில் ரியாத்தில் நடந்த வணிக மாநாடு ஒன்றில் முகம்மது பின் சல்மான் பேசினார். ‘பாலைவனத்தில் ஒரு டாவோஸ்’ என்று பெயரிடப்பட்ட அந்த மாநாட்டை கஷோக்ஜி கொலையை ஒட்டி உலகின் முன்னணி அரசியல், வணிகத் தலைவர்கள் புறக்கணித்தனர்.

கஷோக்ஜியின் உடல் எங்கிருக்கிறது என்று இன்னும் தெரியவில்லை. சௌதி துணைத் தூதரகத்தின் தோட்டத்தில் உள்ள கிணறு இந்த விஷயத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த வழக்கின் புலன் விசாரணை குறித்து முரண்பட்ட செய்திகள் வெளியாகின்றன.

அனடோலு என்ற செய்தி நிறுவனம் இந்த கிணற்றை சோதனையிட சௌதி அரசு அனுமதி மறுத்துவிட்டதாக முதலில் செய்தி வெளியிட்டது. ஆனால், அனுமதி தரப்பட்டுவிட்டதாக என்.டி.வி. செய்தி வெளியிட்டது. அதைப் போல கஷோக்ஜியின் உடமைகள் சௌதி தூதரக கார் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதை மறுத்தும் செவ்வாய்க்கிழமை முரண்பட்ட செய்திகள் வெளியாயின.

கஷோக்ஜி முன்னரே திட்டமிட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டதைக் காட்டும் உறுதியான ஆதாரங்கள் துருக்கியிடம் இருப்பதாக இந்த வாரம் கூறிய துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான், சந்தேக நபர்கள் துருக்கியிலேயே விசாரிக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Sharing is caring!