திமுக தலைவர் உடல்நிலை பாதிப்பு… சென்னை புறப்பட்ட திமுக எம்.பி.,க்கள்

புதுடில்லி:
திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதால் டில்லியில் இருந்து எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் சென்னை புறப்பட்டனர்.

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது.

தொடர்ந்து நள்ளிரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் திரையுலகினர் சந்தித்து உடல் நலம் குறத்து விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், கடந்த சில நாட்களாக தொண்டர்கள் வருகை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியிருந்த காவேரி மருத்துவமனை வளாகம் மீண்டும் பரபரப்பான சூழலுக்கு திரும்பியுள்ளது.

காவேரி மருத்துவமனைக்கு கருணாநிதியின் குடும்பத்தினர் வந்தனர். இதையடுத்து டில்லியில் இருந்து திமுக எம்.பிக்கள், திருச்சி சிவா, டிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் விமானம் மூலமாக சென்னை புறப்பட்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!