திருப்பதி கோயிலில் ஒரே நாளில் ரூ.6 கோடி உண்டியல் வசூல்

ஆந்திரா:
ஒரே நாளில் திருப்பதி கோவிலில் உண்டியல் வருமானம் 6 கோடி ரூபாய் வந்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவருகின்றனர். பக்தர்கள் தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.

உண்டியலில் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி மற்றும் பணம் ஆகியவற்றை செலுத்தி வருகிறார்கள். திருப்பதி கோயிலின் தினசரி உண்டியல் வருமானம் சுமார் ரூ.3 கோடியாக இருந்து வந்துள்ளது.

பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை தொகை தினமும் ஸ்ரீவாரி பக்தர்கள் தேவஸ்தான ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் மூலம் எண்ணப்பட்டு, உடனுக்குடன் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் வரும் வட்டி தொகையின் மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி ராம நவமி அன்று ரூ. 5.73 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதே சாதனையாக இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 6.24 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை வசூலாகி சாதனை படைத்துள்ளது.

இத்தகவலை திருமலை திருப்பதி தேவஸ்தான துணை அதிகாரி சீனிவாசராஜூ தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!