திரும்ப பறந்தது வன உயிரினங்கள்… மலேஷியாவுக்கு…!

சென்னை:
திரும்ப பறந்துள்ளது வன உயிரினங்கள் மலேஷியாவுக்கு என்று தெரிய வந்துள்ளது.

மலேஷியாவில் இருந்து திருச்சிக்கு, விமானத்தில் கடத்தி வரப்பட்ட பாம்பு, உடும்பு உட்பட வன உயிரினங்களை, சென்னை விமான நிலையம் வழியாக மலேஷியாவுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கடந்த, 5ம் தேதி, மலேஷியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் பொருட்களை, சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், மூன்று சூட்கேஸ் பெட்டிகளில், 45 பாம்புகள், 12 ஓணான்கள், தலா இரண்டு தேள், பல்லி, உடும்பு மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் இருந்தன.

இதில், ஒரு ஆமை குஞ்சு, இரண்டு தலை கொண்டது. வசதி படைத்தோர் தங்கள் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்க, தமிழகத்தைச் சேர்ந்த ஏஜன்ட்கள் மலேஷியாவில் இருந்து, இந்த வன உயிரினங்களை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்திருந்தனர்.

மறுநாள் அதே விமான நிலையத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி, ‘ரெய்டு’ நடத்தினர். அங்கு வன உயிரினங்கள் இருப்பதை அறிந்து, அவற்றை வனத்துறையிடம் ஒப்படைக்க சி.பி.ஐ., அதிகாரிகள் வலியுறுத்தினர். பறிமுதல் செய்த வன உயிரினங்களை வாங்கி வைத்துக் கொள்ள வனத்துறைக்கு சிக்கல் உள்ளதால், மலேஷியாவுக்கு அவற்றை அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதையடுத்து, பறிமுதல் செய்த உயிரினங்களை பாதுகாக்க நேற்று முன்தினம் சென்னை, வனத்துறை அதிகாரிகளிடம், அவை ஒப்படைக்கப்பட்டன. ஆனால், பருவநிலை மாற்றம் போன்ற காரணத்தால், ஐந்து பாம்புகள் உட்பட சில உயிரினங்கள் இறந்தன. மீதமுள்ள உயிரினங்கள், சென்னை விமான நிலையம் வழியாக மலேஷியாவுக்கு அனுப்பப்பட்டன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!