திருவானைக்காவல் கோயிலில் நாளை 12ம் தேதி கும்பாபிஷேகம்… திரளான பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பு

திருச்சி:
திருச்சியில் அமைந்துள்ள திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நாளை 12ம் தேதி நடக்கிறது. இதில் பக்தர்களுக்கு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் மற்றும் அகில பாரத அனுமன் சேனா ஆகியவை சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது.

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக்கோவில் திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மாபெரும் சிவன் கோயில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 60வது சிவத்தலமாகும்.

இத்தலத்தின் இறைவி திருப்பெயர் அகிலாண்டேஸ்வரி. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரம், செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம்.

இத்தலத்தின் நான்காவது திருச்சுற்று மதிலை இறைவனே நேரில் ஒரு சித்தரைப் போல் வந்து மதில் சுவர் எழுப்பிய பணியாளர்களுக்கு திருநீறை கூலியாகக் கொடுத்ததாக தலவரலாறு கூறுகிறது. பணியாளர்களின் உழைப்புக்கேற்ப திருநீறு தங்கமாக மாறியதாகவும் தலவரலாறு கூறுகிறது. இதனால் இம்மதிலை திருநீற்றான் மதில் என்று அழைக்கிறார்கள்.

திருவானைக்கா பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான அப்புத்தலமாகும். வடமொழியில் அப்பு என்பதன் பொருள் நீர். மூலவரான ஜம்புகேசுவரரின் லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும். முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

அகிலாண்ட நாயகி ஆதியில் மிக உக்கிரமான சக்தியாக விளங்கினாள். அதனால், பக்தர்கள் கோயிலுக்குள் செல்லாமல் வெளியிலிருந்து வழிபட்டு வந்தனர். இதையறிந்த ஆதிசங்கரர் இரு ஸ்ரீ சக்கரங்கள் செய்து, இவற்றில் அம்பிகையின் தெய்வீக சக்தி முழுவதும் வந்து குடிபுகும்படி வேண்டினார்; அம்பிகையும் அவ்வாறே செய்தார். அந்த ஸ்ரீ சக்கரங்கள் இரண்டும் அம்பிகையின் இரு காதுகளிலும் தோடுகளாக ஒளிவீசுகின்றன.

இத்தகைய சிறப்புகள் கொண்ட இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தீர்மானிக்கப்பட்டு பல்வேறு பணிகளும் நடந்தன. தொடர்ந்து நாளை 12ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று திருச்சி அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனரும், அகில பாரத அனுமன் சேனா தேசிய துணைத்தலைவருமான ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார். கும்பாபிஷேக விழாவில் அகில பாரத அனுமன் சேனா தேசிய தலைவர் எஸ்.வீ. ஸ்ரீதரன் ஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு அகிலாண்டேஸ்வரி சித்தர் பீடம் நிறுவனரும், அகில பாரத அனுமன் சேனா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!