திறக்கக்கூடாது… திறக்கக்கூடாது… மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை:
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது. இப்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த மே மாதம் 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது. ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

இந்த ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா குழுமம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. இதில் சமீபத்தில் தீர்ப்பளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்தது.

தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் 3 வாரத்தில் அனுமதி தரவேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை சிஇஓ ராம்நாத் இன்னும் 2 மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்று அறிவித்தார்.

இதை எதிர்த்து சமூக ஆர்வலர் பாத்திமாபாபு மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த தடை விதித்தது. ஆலையின் தற்போதைய நிலையே தொடர வேண்டும். இது குறித்து ஆலை சிஇஓ ராம்நாத்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!