தி.மு.க தலைவர் பதவிக்கு ஸ்டாலின் வேட்புமனு

தி.மு.க தலைவருக்கான தேர்தலுக்குப் போட்டியிடும் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

தி.மு.க தலைவர் மு.கருணாநிதி கடந்த 7ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார். இதனையடுத்து அக்கட்சியின் அடுத்தத் தலைவருக்கான உட்கட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கு இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்கும் என்று கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இதில் போட்டியிடும் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவாலயத்தில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தலைவர் பதவிக்கு தேர்வாக 65 மாவட்டச் செயலாளர்கள் முன்மொழிந்தனர்.

முன்னதாக அண்ணாநகரில் உள்ள தி.மு.க பொதுச் செயலாளர் அன்பழகன் வீட்டிற்குச் சென்ற ஸ்டாலின், அவரிடம் வேட்புமனுவை கொடுத்து ஆசிப்பெற்றார். பின்னர் மெரினாவில் உள்ள மு.கருணாநிதியின் சமாதிக்கு சென்று ஆசிப்பெற்று மரியாதை செலுத்தினார். அங்கிருந்து கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற ஸ்டாலின், தாய் தயாளு அம்மாளிடம் ஆசிப்பெற்றார்.

பின்னர் அறிவாலயத்திற்குச் சென்றார். ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததையொட்டி அங்குத் தொண்டர்கள் கூடியிருந்தனர். மேலும் கட்சி பொருளாளர் பதவிக்குத் துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Sharing is caring!