தீ விபத்தில் 6 அடுக்குமாடி ஓட்டல் ஒன்று முற்றிலும் எரிந்து நாசம்
காஷ்மீர் ஸ்ரீநகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 அடுக்குமாடி ஓட்டல் ஒன்று முற்றிலும் எரிந்து நாசமானது.
காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் ரீகல் சவுக் என்ற இடத்தில் பேம்போஷ் என்ற பிரபல ஓட்டல் உள்ளது. 6 அடுக்கு மாடிகளை கொண்ட இந்த ஓட்டலின் 6வது தளத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென ஓட்டலின் மற்ற தளங்களுக்கும் பரவியது.
25 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓட்டலில் இருந்து ஊழியர்கள், விருந்தினர்கள் உடனடியாக பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். தீ விபத்தில் கட்டிடம் முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த கட்டிடத்தில் பத்திரிகை, தொலைக்காட்சி சேனல்கள், பிற வர்த்தக நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வந்துள்ளன. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.