துணிச்சலுடன் சண்டையிட்டு சீனத் தூதரக அதிகாரிகளை பெண் எஸ்.பி. ஒருவர் காப்பாற்றியுள்ளார்

பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் துணிச்சலுடன் சண்டையிட்டு சீனத் தூதரக அதிகாரிகளை பெண் எஸ்.பி. ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

நேற்று கராச்சியில் உள்ள சீன தூதரகத்தினுள் 3 தீவிரவாதிகள் கையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளுடன் நுழைந்து தாக்குதல் நடத்தினர். தூதரகத்திற்கு பெண் எஸ்.பி.சுஹாய் அஜிஸ் தல்பூர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன.

இந்நிலையில் தீவிரவாதிகள் தூதரகத்தினுள் தாக்குதல் நடத்திய உடன் சுஹார் அஜிஸ் தலைமையிலான படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பலூச் கிளர்ச்சிப்படையை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து ஏ.கே.47 துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், கையெறி குண்டுகள், துப்பாக்கி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட தூதர அதிகாரிகளை பாதுகாத்த பெண் எஸ்.பி.சுஹார் அஜிஸ் தல்பூருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இத்தகைய வீரமிக்க சுஹார் பாகிஸ்தானின் தாண்டோ முகமது கான் மாவட்டம் தல்பூர் கிராமத்தை சேர்ந்தவர். நடுத்தர குடும்பத்தை சார்ந்த சுஹார் சிறுவயதிலேயே வறுமையால் பாதிக்கப்பட்டார். கடினமான சூழலில் படிப்பை முடித்த சாஹர் 2013ம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வெழுதி காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.

தீவிரவாதிகளுடனான தாக்குதல் குறித்து சுஹார் அஹிஸ் கூறுகையில், “ கையில் துப்பாக்கி, வெடிகுண்டுகள் மற்றும் உணவுகளுடன் வந்த தீவிரவாதிகள் சீனத் தூதரகத்தை கைப்பற்றும் நோக்கத்துடன் வந்திருக்க கூடும். ஆனால், அவர்கள் வாயிலை நெருங்கியதும் சுதாரித்த பாதுகாப்பு படையினர் தாக்குதலை தொடங்கினர். எங்களை தீவிரவாதிகளால் சமாளிக்க முடியவில்லை. இருப்பினும் எங்கள் தரப்பில் இரு போலீசார் கொல்லப்பட்டனர் “ என தெரிவித்தார்.

Sharing is caring!