தென் கொரியாவில் இறுதி எச்சரிக்கை

மக்களுக்கான இறுதி எச்சரிக்கை, அக்டோபர் 8 அன்று, தென் கொரியாவில் வெளியிடப்பட்டது. அதில், ‘உலகின் வெப்ப நிலை, தொழிற்சாலை மயத்திற்கு முன்பிருந்ததை விட, 1.1 டிகிரி சென்டிகிரேடு உயர்ந்துள்ளது.

‘இப்போது போலவே பசுமைக்குடில் வாயுக்கள், தொடர்ந்து வெளியேற்றப்பட்டால், 2030ம் ஆண்டிலிருந்து, 2052க்குள், 1.5 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு, பூமி சூடேறும்’ என, எச்சரித்துள்ளது.ஐ.பி.சி.சி., எனப்படும், அரசுகளுக்கு இடையேயான, பருவ நிலை மாற்றக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், 33 பக்க சுருக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது, மிகவும் அபாயகரமாக உள்ளது.

‘உலக, ஆண்டு சராசரியை விட, அதிக அளவிலான வெப்பம், பல தரப்பட்ட நிலப் பகுதிகளிலும், பல பருவங்களிலும் உணரப்படுகிறது. அதை விட, 2 அல்லது, 3 மடங்கு வெப்பம், ஆர்க்டிக் பனிப் பிரதேசத்தில் நிலவுகிறது’ என, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.அண்மையில் வெளியான, ஐ.பி.சி.சி.,யின் அறிக்கை, உலகின் வெப்ப நிலை, 1.5 டிகிரி, ‘சென்டிகிரேடு’ கூடினால் ஏற்படும் தாக்கங்களுக்கும், 2 டிகிரி சென்டிகிரேடு கூடினால் ஏற்படும் பாதிப்புகளுக்கும் உள்ள வித்தியாசங்களை மதிப்பிடுகிறது.

வெப்பம், 2 டிகிரி சென்டிகிரேடு கூடினால், நேரக்கூடிய விளைவுகள், 1.5 சென்டிகிரேடு அளவை எட்டினாலே நேர்ந்து விடும் என்பது தான், அறிக்கையின் அபாய மணி!அந்த அறிக்கையை வெளியிடுவதற்கு உந்துதலாக இருந்தது, உலகின், சிறிய தீவு நாடுகளின் கூட்டமைப்பு தான்.

இந்த அமைப்பு, வெப்ப நிலை உயர்வு, 1.5 டிகிரி சென்டிகிரேடு இருந்தால் ஏற்படும் ஆபத்துகளையும், வெப்ப உயர்வை, 1.5 டிகிரி சென்டிகிரேடுக்குள் கட்டுப்படுத்தும் வழிகளையும் தெரிவிக்கும்,சிறப்பு அறிக்கையை வெளியிடும்படி கேட்டுக் கொண்டது.

இதற்கு முன் வெளியான கணிப்புகள், 2 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை உயர்ந்தால் கூட, உலக நாடுகளால் தாங்கிக் கொள்ள முடியும்; அதைத் தாண்டினால் தான் பேரழிவு வரும் என்றன.பருவ நிலை மாற்றம் குறித்த, பாரீஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள், 21ம் நுாற்றாண்டின் இறுதிக்குள், உலகின் வெப்ப நிலை, 3 டிகிரி சென்டிகிரேடு கூடி விடும் என, கணித்துள்ளது.

ஆனால், தற்போதைய, ஐ.பி.சி.சி., அறிக்கை, உலக சராசரி வெப்ப நிலையில், 2 டிகிரி சென்டிகிரேடு கூடினாலே, கடல் நீர் மட்டம் உயர்ந்து, மாலத்தீவுகள், மொரீஷியஸ், மார்ஷல் தீவுகள் போன்ற, சிறிய தீவு நாடுகள், சில ஆண்டுகளில் கடலில் மூழ்கும் என, எச்சரிக்கிறது.

தொழில் மயமாவதற்கு முன்பிருந்த வெப்பநிலையிலிருந்து, 1.5 டிகிரி சென்டிகிரேடுக்கு மிகாமல் கட்டுப்படுத்துவதற்கு, உலகின் ஆற்றல் அமைப்புகள், தொழில் துறை, போக்குவரத்து, நிலப் பயன்பாடு, நகரங்கள் போன்றவற்றில் அதிரடியான, தலை கீழ் மாற்றங்களை கொண்டு வந்தாக வேண்டும்.

சொல்லப் போனால், தனி மனித வாழ்க்கை முறையிலிருந்து, ஒட்டு மொத்த நாடுகளின் செயல்பாடு வரை, ஒவ்வொரு அம்சத்தையும், மறுபரிசீலனை செய்யவேண்டும். கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தி, பேரழிவுகளை தவிர்க்க, அதிரடி நடவடிக்கையை மேற்கொள்வது தான் ஒரே வழி.பருவ நிலை, கடல்கள், நிலப் பரப்பு போன்றவற்றில் நிகழும் மாற்றத்தின் பிரமாண்டம் மட்டுமல்ல, அந்த மாற்றங்கள் நிகழும் வேகமும், பதற வைக்குமளவுக்கு இருப்பதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் உலகம், ஆட்களைக் கொல்லும் வெப்ப அலைகள், கடும் புயல்கள், வறட்சிகள், கொடூர காட்டுத் தீ போன்றவற்றை அனுபவித்து விட்டது. இத்தனையும், 1 டிகிரி சென்டிகிரேடு வெப்ப உயர்வுக்கே நடந்து முடிந்து விட்டது. அடுத்து, 1.5 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் கூடினால், இதை விட பேரழிவில் தான் போய் முடியும்.

எனவே, 2 டிகிரி சென்டிகிரேடு உயர்ந்தால் என்னவாகும் என்பதை, யாரும் கற்பனை கூடச் செய்து பார்க்கத் தயாராக இல்லை.இந்த அறிக்கை, வளி மண்டலத்தில், கரியமில வாயு பல நூறு ஆண்டுகளாக சேர்ந்து வருவது பற்றி விரிவாக பேசுகிறது.பெட்ரோலிய எரிபொருள் பயன்பாடு, தொழில் துறை மாசு, நிலப் பயன்பாடு போன்ற மனித நடவடிக்கைகளால், உலக கரியமில வாயு வெளிப்பாடு, 2017ல் மட்டும், 41 ஆயிரம் கோடி பில்லியன் டன்களாக இருந்ததாக, உலக கரியமிலத் திட்டம் தெரிவிக்கிறது.

இதே அமைப்பின், மதிப்பீட்டின்படி, இந்தியாவின் கரியமில வாயு வெளிப்பாடு, 2017ல், 2 சதவீதம் கூடியுள்ளது. இதோடு ஒப்பிட்டால், கடந்த, 10 ஆண்டுகளில், இந்தியாவின் கரியமில வாயு வெளிப்பாடு, 6 சதவீதம் கூடியுள்ளது.கரியமில வாயுவைத் தவிர, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, சி.எப்.சி., எனப்படும், ‘குளோரோப்ளூரோகார்பன்’ போன்ற, பசுமைக்குடில் வாயுக்களும் பூமியை சூடேற்றுகின்றன.

அமெரிக்காவின், தேசிய கடல் மற்றும் வளி மண்டல அமைப்பான, என்.ஓ.ஏ.ஏ., ஆண்டுதோறும் வெளியிடும், வாயு அட்டவணையின், 2018ம் பதிப்பின்படி, வளி மண்டலத்தில் கலக்கும், மீத்தேன் வாயுவின், உலக சராசரி அளவு, 2007ம் ஆண்டிலிருந்து அதிகரிக்கத் துவங்கியுள்ளது.

இதற்குக் காரணம், 2007ல், ஆர்க்டிக் பனிப் பகுதியில் வெப்பம் கூடியதும், 2007- – 08ம் ஆண்டு கால கட்டத்தில், வெப்ப பிரதேசங்களில் கூடுதல் மழைப் பொழிவும் தான்!பூமியின் வளி மண்டலத்தில் மேலே போர்த்தியுள்ள, ‘ஓசோன்’ படலத்தில் பெருந்துளை ஏற்படுவதைத் தடுக்க, 1987ல் போடப்பட்ட, மான்ட்ரியேல் ஒப்பந்தத்தின் விளைவாக, சி.எப்.சி., வாயுவின் சுமை, தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள வாயு வெளியேற்றக் கட்டுப்பாடுகளை, உலக நாடுகள் அப்படியே நிறைவேற்றினாலும் கூட, கரியமில வாயுவிற்கான உச்ச வரம்பை தாண்டுவதற்கு, இன்னும், 11 ஆண்டுகள் இருப்பதாக, ஐ.பி.சி.சி.,யின் அறிக்கை எச்சரித்துள்ளது.

சூடேற்றத்தில், 0.5 டிகிரி கூடினாலும், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்க முடியாத அளவுக்கு, அது சிதைத்து விடும். ஐ.பி.சி.சி.,யின் அறிக்கை, 1.5 சென்டிகிரேடு வெப்ப உயர்வின் போதும், 2 சென்டிகிரேடு உயர்வின் போதும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஒப்பிடுகிறது.எனினும், 0.5 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் உயர்ந்தால் ஏற்படும் பாதிப்புகளை மதிப்பிட்டாலே, சூழலியல் வல்லுனர்களுக்கு கண்ணைக் கட்டுகிறது.

உலக வெப்ப மயமாதல், 1.5 டிகிரி சென்டிகிரேடை எட்டினால் பல பிராந்தியங்களில், அதீத வெப்ப நிலை உருவாகும். சில பகுதிகளில், கன மழை பொழிவும் இருக்கும். சில பகுதிகளில், அடிக்கடி வறட்சியும் ஏற்படும் என்கிறது, ஐ.பி.சி.சி.,நடப்பு, 21ம் நுாற்றாண்டு முழுவதும் வெப்பமயமாதல், 1.5 டிகிரி சென்டிகிரேடு அளவிலேயே கட்டுப்படுத்தப்பட்டாலும், 2100ம் ஆண்டுக்கு பிறகும், கடல்களின் மட்டம், உயர்ந்தபடியே இருக்கும் என்கிறது, ஐ.பி.சி.சி., அறிக்கை.அன்டார்டிக் கண்டத்தை போர்த்தி இருக்கும் பனிப் பாறைகள் உருகுதல், கிரீன்லாந்தை போர்த்தியுள்ள பனிப் படலம் உருகுதல் போன்றவற்றால், அடுத்த சில நுாற்றாண்டுகள் முதல், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, கடல் மட்டம் பல மீட்டர்கள் உயர்ந்து விடும்.இதனால், பூமியின் பல்லுயிர் தன்மை, சூழலியல் அமைப்புகள் வெகுவாக பாதிக்கப்படும்.

இதன் விளைவாக, பல உயிரினங்கள் முற்றிலும் அழியும். இத்தகைய அழிவு, பல சூழலியல் அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடும்.கடல் சூழலியலை பொறுத்த வரை, கடல் உயிரினங்கள் பல, தங்கள் வாழிடத்தை இழந்து, உயர்வான கடல் மட்டத்திற்கு பெயர்ந்து, வாழ வேண்டியிருக்கும்.

பவளத் திட்டுகள், கடல் பரப்பில், 1 சதவீதமே உள்ளவை. என்றாலும் அவை, 25 சதவீத கடல் உயிரினங்கள் தழைப்பதற்கு ஆதாரமாக உள்ளன.பவளத்திட்டுகள் கடலில் சீறும் அலைகளின் ஆற்றலில், 97 சதவீதத்தை மட்டுப்படுத்துவதாக, ‘நேச்சர் கம்யூனிகேசன்ஸ்’ என்ற அறிவியல் இதழில், 2014ல் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது.

சர்வ தேச பவளத்திட்டு மீட்பு அமைப்பான, ஐ.சி.ஆர்.ஐ.,யின் மதிப்பீட்டின்படி, இந்தியாவின் கடல் பகுதியிலுள்ள, 5,790 சதுர கி.மீ., பரப்பு பவளத் திட்டுகளில், 61 பவளத் திட்டுகள், மனித நடவடிக்கைகளாலும், வெப்பமயமாதலாலும், அதிக அல்லது மிக அதிக அச்சுறுத்தலை சந்திக்கின்றன.

‘இந்த, ஐ.பி.சி.சி., அறிக்கை, வழக்கமான அறிக்கை அல்ல. விரைவான நடவடிக்கைகளை முடுக்கி விடுவதற்காகவே எழுதப்பட்ட சிறப்பு அறிக்கை’ என்கிறார், பெங்களூரில் உள்ள, இந்திய அறிவியல் கழகத்தின், வளி மண்டல மற்றும் கடல் அறிவியல் மையத்தின், கவுரவ பேராசிரியரான, ஜெயராமன் ஸ்ரீனிவாசன்.

புவி வெப்பமாதலால் ஏற்படும் தீய விளைவுகள், ஏற்கனவே நம்மிடையே தென்பட ஆரம்பித்து விட்டன. என்றாலும், 2 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் உயர்வதால் ஏற்படும் மோசமான பாதிப்புகளை, 1.5 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குள் கட்டுப்படுத்துவதன் மூலம் தவிர்க்கலாம் என, ஐ.பி.சி.சி.. அறிக்கை நம்பிக்கை தெரிவித்துள்ளது தான், இதில் ஆறுதலான விஷயம்

Sharing is caring!