தெலுங்கு தேசம் கட்சி முழுமையாக சந்திரபாபு கட்டுப்பாட்டுக்குள் வந்தது

அமராவதி:
என்டிஆர் மகன் ஹரிகிருஷ்ணா மரணத்தை தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சி முதல்வர் சந்திரபாபுவின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்து சேர்ந்துள்ளது.

ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, என்.டி.ராமராவின் மருமகன். ராமராவின் மகன் ஹரிகிருஷ்ணா. இவரும் தெலுங்கு தேசம் கட்சியில் தான் இருந்தார். ராமராவின், அரசியல் வாரிசு யார் என்பதில், சந்திரபாபு குடும்பத்திற்கும், ஹரிகிருஷ்ணா குடும்பத்திற்கும் இடையே போட்டி இருந்து வந்தது.

1995ல் தெலுங்கு தேசத்தில் பிளவு ஏற்பட்ட போது, குடும்பத்தினர் ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதிக்கு ஆதரவாக இருந்தபோது, சந்திரபாபுவுடன் ஹரிகிருஷ்ணா செயல்பட்டார். சந்திரபாபு ஆட்சிக்கு வந்ததும் ஹரிகிருஷ்ணாவிற்கு அமைச்சர் பதவி வழங்கினார்.

சில நாட்களில் கருத்து வேறுபாட்டால் கட்சியிலிருந்து பிரிந்து சென்று தனிக்கட்சி துவக்கினார் ஹரிகிருஷ்ணா. அது வெற்றி பெறாததால், மீண்டும் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். அவர், மீண்டும் பிரிந்து சென்றால் கட்சிக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் சந்திரபாபு அவருடன் இணைந்து செயல்பட்டார்.

இந்நிலையில் ஹரிகிருஷ்ணா மறைவினாலும், சந்திரபாபுவின் மகன் நாரா லோகேஷ், ராமராவின் மற்றொரு மகன் பாலகிருஷ்ணாவின் மகளை திருமணம் செய்து கொண்டதாலும், ராமராவின் அரசியல் வாரிசு என்ற பெயர் சந்திரபாபுவுக்கு வந்துள்ளது.

ராமராவின் மகள் புரந்தேஸ்வரி பா.ஜ.,வில் உள்ளார். பாலகிருஷ்ணா, தெலுங்கு தேச எம்எல்ஏவாக உள்ளார். இவர்களை தவிர ராமராவின் குடும்பத்தினர் யாரும் அரசியலில் இல்லை. கடந்த தேர்தலில், அரசியல் மாற்றம் காரணமாக ஹரிகிருஷ்ணா, ஜூனியர் என்டிஆர் உதவியில்லாமல் சந்திரபாபு ஆட்சிக்கு வந்தார்.

இருப்பினும், ஹரிகிருஷ்ணாவை தன்னுடன் வைத்து கொண்ட சந்திரபாபு, அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி பொலிட் பீரோ பதவி அளித்தார். இதன் மூலம் ராமராவின் குடும்பத்தினருக்கு உயர்ந்த பதவி அளித்துள்ளேன் என்று காட்டிக்கொண்டார்.

இப்போது, ஹரிகிருஷ்ணா மறைவினாலும், பாலகிருஷ்ணா நம்பிக்கைக்குரியவராக மாறியதாலும், புரந்தேஸ்வரி பா.ஜ.,வில் இருப்பதாலும், தெலுங்கு தேசம் தற்போது முழுவதுமாக சந்திரபாபுவின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்டது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!