“நாங்க கட்டிய அணை… எங்க விருப்பத்துக்குதான் பெயிண்ட்”

கோல்கட்டா:
நாங்க கட்டிய அணை… எங்க விருப்பத்துக்கு தான் பெயிண்ட் அடிப்போம் என்று மாநிலம் விட்டு மாநிலம் தாண்டி நடந்துள்ளது ஒரு சர்ச்சை.

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அணைக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு விருப்பமான வெள்ளை மற்றும் நீல நிறம் பூசும் முயற்சியால் சர்ச்சை எழுந்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு கூட தனக்கு விருப்பமான வண்ணத்தை பூசும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ரகுபர்தாஸ் தலைமையில் பா.ஜ., ஆட்சி உள்ளது. இம்மாநிலத்தின் தும்கா மாவட்டத்தில் மயூராக் ஷி ஆற்றின் குறுக்கே மசாஞ்ஜோர் அணை கட்டப்பட்டுள்ளது. 1950ம் ஆண்டுகளில் இந்த அணையை மேற்கு வங்க அரசு தான் கட்டியது. எனவே, அணையின் பராமரிப்பு பணிகளை மேற்கு வங்க நீர்பாசன துறை தான் கவனித்து வருகிறது.

சமீபத்தில் இந்த அணைக்கு மம்தாவுக்கு விருப்பமான வெள்ளை மற்றும் நீல நிறம் வண்ணம் பூசப்பட்டது. இதற்கு பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆனால், மேற்கு வங்க நீர்பாசன துறை அமைச்சர் சோமன் மகாபத்ரா தெரிவித்துள்ளதாவது:

அந்த அணையை கட்டியது நாங்கள் தான். அதை பராமரிப்பதும் நாங்கள் தான். நாங்கள் விரும்பிய வண்ணத்தை பூசுவோம். எங்களை யாரும் தடுக்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!