“நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுவர்”

இஸ்லாமாபாத்:
நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுவார்கள் என்று பாக்., நாட்டின் சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக சொத்து குவித்து இருப்பதை ‘பனாமா பேப்பர்ஸ்’ வெளியிட்டது. இதனால் பதவி இழந்த நவாஸ் மற்றும் குடும்பத்தினர் மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

இதில் லண்டனில் உள்ள அவென்பீல்டு குடியிருப்பு தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகளும், மகள் மரியமுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் சப்தருக்கு 1 ஆண்டும் சிறைத்தண்டனை விதித்து கடந்த 6–ந் தேதி தேசிய பொறுப்புடைமை கோர்ட் தீர்ப்பு வழங்கியது.

தொடர்ந்து 3 பேருக்கும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
லண்டனில் இருக்கும் நவாசும், மரியமும் 13–ந் தேதி நாடு திரும்ப உள்ளனர். இதை அவர்கள் உறுதி செய்ததை தொடர்ந்து, இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தயாராக இருப்பதாக தேசிய பொறுப்புடைமை கோர்ட் அறிவித்தது.

எனவே லாகூரில் அவர்கள் தரையிறங்கியதும் கைது செய்யப்படுவார்கள் என தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் சட்ட மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அலி ஷபார் கூறுகையில், கோர்ட் உத்தரவை அரசு நிறைவேற்றும்.

நவாஸ் ஷெரீப் மற்றும் மரியத்தை விமான நிலையத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பாகிஸ்தான் திரும்பும் முன்னதாக ஜாமீன் பெற முடியாது என்றார்.

இதற்கிடையில் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மருமகனை போலீசார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில் பதுங்கி இருந்த இவர் பாக்., திரும்பிய போது கைது செய்யப்பட்டுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!