நிறுத்தி வைச்சாட்டாங்களே… மக்கள் அவதி… அரசு கவனிக்குமா?

திருச்சி:
நிறுத்தி வைப்பு… நிறுத்தி வைப்பு… ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தில் ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் வழங்குவது நிறுத்தி வைப்பால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க, ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டுகள் கடந்த ஆண்டு(2017) ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் கொண்டு வரப்பட்டது. பழைய ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்கள் தங்களது குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் கார்டு ஜெராக்ஸ் சமர்ப்பித்து ஸ்மார்ட் கார்டுக்கு பதிவு செய்யும் முறை வந்தது.

புதிதாக ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம், கடை மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம் போன்ற காரணங்களுக்காக வட்ட வழங்கல் அலுவலகம் வரத்தேவை இல்லை. அவர்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பொது இ-சேவை மையங்களிலேயே பதிவு செய்து நகல் பெற வசதி செய்யப்பட்டது. இ-சேவை மையங்கள் மூலமாகவே ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டன.

இருப்பினும் இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதிலும் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. அதாவது, ஸ்மார்ட் கார்டின் விண்ணப்பித்தவரின் புகைப்படத்துக்கு பதிலாக நடிகர், நடிகையின் படம், செருப்பு, ஆண் பெயருக்கு பெண் படம், சுவாமி படங்கள் என ஸ்மார்ட் கார்டில் பல குளறுபடிகள் நடந்தன.

இப்படி தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலமாகவும், பொது வினியோகத்துறை மூலமாகவும் வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டு பெறாதவர்களுக்கு ரேஷனில் பொருட்கள் கிடையாது என்ற அரசின் அறிவிப்பும் மக்களை எரிச்சலடைய செய்தது. அதாவது பழைய அட்டை வைத்திருப்பவர்களுக்கு ரேஷனில் பொருட்கள் இல்லை என்று மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வட்ட வழங்கல் அதிகாரிகள், கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு பொது வினியோகத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு இ-சேவை மையம் மற்றும் பொதுவினியோகத்துறை மூலம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவது அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்குவதில் உள்ள குளறுபடியே இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இதனால், புதிதாக ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு, அரசின் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!