நீதித்துறை மீது கூறப்படும் ஊழல்களை ஏற்க முடியாது… ஓய்வு நீதிபதி காட்டம்

புதுடில்லி:
நீதித்துறை மீது கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது என்று ஓய்வு நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீதித்துறை மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், வரலாற்றில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பின் போது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன் வைத்த 4 நீதிபதிகளில் குரியன் ஜோசப்பும் ஒருவர். இவர் கடந்த 30 ம் தேதி சுப்ரீம் கோர்ட் நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வுபெற்ற பிறகு இவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக இருந்த போது சுப்ரீம் கோர்ட் சரியான பாதையில் செல்லவில்லை. இது குறித்து பலவிதங்களில் அப்போது தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ராவிடம் எடுத்துரைத்துள்ளோம். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. அதனால் வேறு வழியில்லை என்று கருதியதால் செய்தியாளர்கள் முன்னிலையில் அனைத்தையும் வெளி கொண்டு வந்தோம்.

தீபக் மிஸ்ரா ஓய்விற்கு பிறகு தற்போது சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகள் கொஞ்சம் பரவாயில்லை. சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்தும் மாற சில காலம் ஆகும். இது ஒரே நாளில் மாறி விடக் கூடியது அல்ல.

இது ஒரு அமைப்பு. சுப்ரீம் கோர்ட்டில் நீதித்துறையில் ஊழல் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது. ஒருவேளை கீழமை நீதிமன்றங்களில் அவ்வாறு நடந்து இருந்தால் அது மாநிலங்களின் பிரச்னை. நான் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்த வரை அப்படி எந்த குற்றச்சாட்டும் என் கவனத்திற்கு வரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!