நீதிபதி பிரெட் கவனாவை எப்பிஐ விசாரணைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு
நீதிபதி பிரெட் கவனா மீது 3 பெண்கள் பலாத்கார புகார் அளித்தது தொடர்பாக எப்பிஐ விசாரணைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு பிரெட் கவனாவை அதிபர் டிரம்ப் பரிந்துரை செய்தார்.
அடுத்த சில நாட்களிலேயே, கவனா மீது 3 பெண்கள் பாலியல் பலாத்கார புகார் கொடுத்தனர். இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்பிக்கள், பலாத்கார புகார் கொடுத்த பெண்களுக்கு ஆதரவாக உள்ளனர்.
இதற்கிடையே, செனட் நீதிக்குழு முன்பாக புகார் கொடுத்த பெண்களின் ஒருவரான போர்டும், நீதிபதி கவனாவும் நேற்று முன்தினம் தங்கள் தரப்பு வாதத்தை நிறைவு செய்தனர்.
கவனாவை தேர்வு செய்வது தொடர்பான செனட் உறுப்பினர்களின் ஓட்டெடுப்பு அடுத்த வாரம் நடக்க உள்ளது. இந்நிலையில், எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அதிபர் டிரம்ப், நீதிபதி கவனா விவகாரத்தில் அமெரிக்க உளவுத்துறையான எப்பிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இந்த விசாரணை ஒருவாரத்தில் முடித்து அறிக்கை தரப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். எனவே, கவனா உச்ச நீதிமன்ற நீதிபதி ஆவதற்காக செனட் உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட உள்ள ஓட்டெடுப்பு மேலும் ஒருவாரத்திற்கு தள்ளிப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.