நோவிசோக் நச்சுபொருள் தாக்குதலுக்குள்ளான பெண் பலி

லண்டன்:
‘நோவிசோக்’ நச்சுப்பொருள் தாக்குதலுக்கு உள்ளான பெண் சிகிச்சை பலனின்றி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (66) தன் மகளுடன் கடந்த மார்ச் 4-ந் தேதி சாலிஸ்பரி நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்கு மயங்கிய நிலையில் கிடந்தார். அவர்களது உடலில் விஷம் ஏறியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் இங்கிலாந்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ரஷியா தான் காரணம் என இங்கிலாந்து நேரடி குற்றச்சாட்டை முன்வைக்க, ரஷியா அதனை மறுத்தது. இந்த நிலையில் இங்கிலாந்தின் வில்டு‌ஷயர் கவுண்டியில் உள்ள சாலிஸ்பரி நகரில் வசித்து வந்த சார்லி ரோவ்லே (45), டான் ஸ்டர்கஸ் (44) என்ற தம்பதி கடந்த வாரம் தங்களது வீட்டில் சுயநினைவற்று கிடந்தனர்.

அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் நடந்த விசாரணையில் அவர்கள் இருவரும் ‘நோவிசோக்’ நச்சுப்பொருள் தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்தது. ரஷிய உளவாளி மற்றும் அவருடைய மகள் மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தப்பட்ட அதே நச்சு பொருளால் இங்கிலாந்து தம்பதியர் தாக்குதலுக்கு உள்ளானது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த டான் ஸ்டர்கஸ், சிகிச்சை பலனின்றி இறந்தார். ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!