படேல் சிலையை விட உயரமாக அமையணும்… சட்டசபை கட்டடம்… முதல்வர் முடிவு

ஐதராபாத்:
அமராவதியில் அமைய உள்ள சட்டசபை கட்டடம் சர்தார் வல்லபாய் படேல் சிலையை விட உயரமாக இருக்க வேண்டும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

புதியதாக அமைய உள்ள ஆந்திர தலைநகரான அமராவதியில், உலகின் மிக உயரமான சிலையாக கருதப்படும் படேல் சிலையை விட உயரமான சட்டசபை கட்டடத்தை கட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

குஜராத்தில் 182 மீட்டர் பட்டேல் சிலை திறக்கப்பட்ட பிறகு அதற்கு போட்டியாக உயரமான சிலை அமைக்க பல்வேறு மாநிலங்கள் போட்டி போட்டு அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. ராமருக்கு 201 மீட்டரில் சிலை அமைக்க போவதாக உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், காவிரி தாய்க்கு 125 அடியில் சிலை அமைக்க போவதாக கர்நாடக அரசும் அறிவித்துள்ளன.

இந்த வரிசையில் தற்போது ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் அமராவதியில் 250 மீட்டர் உயரத்தில் சட்டசபை கட்டடம் அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த உயரமான சட்டசபை கட்டடத்தின் மாதிரி வடிவமைப்பில் சிறு திருத்தங்கள் செய்து, இரண்டு நாட்களில் சந்திரபாபு நாயுடு இறுதி செய்ய உள்ளதாக லண்டனை சேர்ந்த கட்டுமான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

3 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட உள்ள இந்த சட்டசபை கட்டடத்தில் 2 மாடங்கள் அமைக்கப்பட உள்ளது. 80 மீட்டர் உயரத்தில் உள்ள முதல் மாடம் 300 பேர் வரை அமரக்கூடிய வசதி கொண்டதாகவும், 2வது மாடம் 250 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட உள்ளது. 20 பேர் அமரக்கூடிய வசதி கொண்ட இந்த
2 வது மாடத்தில் இருந்து அமராவதி நகர் முழுவதையும் பார்க்க முடியும்.

2வது மாடம் முழுவதும் கண்ணாடியால் அமைக்கப்பட உள்ளதாகவும், இங்கு செல்ல லிப்ட் வசதியும் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. புயல், நிலநடுக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படாத வகையில் இந்த கட்டடம் அமைக்கப்பட உள்ளது. இந்த சட்டசபை கட்டடம் அமைக்கப்பட்டால் நாட்டில் மிக உயரமான கட்டடமாக இது கருதப்படும்.

நவம்பர் மாத இறுதியில் இந்த சட்டசபை கட்டடம் கட்ட டெண்டர் கோரப்பட உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் இந்த கட்டட பணிகள் நிறைவு செய்யப்பட உள்ளது. உயரமான சட்டசபை கட்டடம் மட்டுமின்றி தலைமை செயலகத்திற்காக 5 கட்டட மாதிரிகளையும் சந்திரபாபு நாயுடு தேர்வு செய்து வைத்துள்ளாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!