பனிப்பாறைச் சரிவில் சிக்குண்ட பிரித்தானிய சிறுவனை மோப்பநாய் கண்டுபிடித்துள்ளது

பிரான்ஸுக்கு சுற்றுலா சென்ற நிலையில் பனிப்பாறைச் சரிவில் சிக்குண்ட பிரித்தானிய சிறுவனை மோப்பநாய் ஒன்று மிக லாவகமாக கண்டறிந்துள்ளது. அதன்பின்னர் மீட்புக் குழுவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் மோப்ப நாய் அடையாளம் காட்டிய இடத்தில் பனியை தோண்டி சிறுவனை வௌியே எடுத்துள்ளார்.

சிறுவன் பனிச்சரிவில் வீழ்ந்து 15 நிமிடங்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட போதும், அவன் உயிருடன் இருந்தமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக பனிப்பாறைகளுக்குள் சிக்கியவர்களை கண்டறிவதற்கு அதற்கான கருவிகள் எதுவும் இன்றி புதையுண்டவரை மீட்பது கடினம்.

எனினும், மீட்புப் பணியாளரான ரஃபேயில் சோவின் (Raphael Chovin) என்பவரும் அவரது மோப்ப நாயான கெட்ரோ(Getro) வும் அந்த சிறுவனை உயிருடன் மீட்டுள்ளமை அற்புதமாகவே கருதப்படுகிறது. பிரித்தானியாவில் வசிக்கும் குறித்த பிரான்ஸ் சிறுவன் தனது பெயரை வெளியிட விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சிலுள்ள Champagny-en-Vanoise பகுதியில் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட சென்றிருந்த நிலையிலேயே அந்த சிறுவன் பனிப்பாறைச் சரிவில் சிக்கியுள்ளான்.

குறித்த சிறுவன் உட்பட ஏழு பேர் கொண்ட குழுவொன்று பனிச்சறுக்கு விளையாட்டுக்காக சென்றிருந்த போது அவர்கள் 500 மீற்றர் அகலமும் 800 மீற்றர் நீளமும் கொண்ட பனிப்பாறைச் சரிவைத் தாண்டியுள்ளனர். இதன்போது, பனிப்பாறைச் சரிவில் 400 மீற்றர்களுக்கு இழுத்துச் செல்லப்பட்ட அந்த சிறுவன் பனியில் புதையுண்டான்.

பனிப்பாறைக்கிடையில் சிறிது காற்று நிரம்பிய ஒரு இடத்தில் சிக்கிக் கொண்டதால் அந்த சிறுவன் உயிருடனும் சுய நினைவுடனும் இருந்திருக்கிறான் என்று மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!