பயங்கரவாதிகள் அட்டூளியம்….ஆப்கானில் 1000 பாடசாலைகள் மூடல்

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலின் எதிரொலியாக நாடு முழுவதும் 1000-த்துக்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் ஷியா பிரிவு மாணவர்கள் படிக்கும் கல்வி நிலையங்கள் தொடர்ந்து தாக்கப்படுவது வழக்கமாகி வருகிறது.   இந்த ஆண்டில் இதுவரை மட்டும் 86 கல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரு தினங்களுக்கு முன் காபூலில் உள்ள தனியார் கல்வி மையத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 48 மாணவ மாணவியர் கொல்லப்பட்டனர். 67 பேர் படுகாயம் அடைந்தனர்.  காபூலின் டஸ்த்-ஈ-பராச்சி என்ற இடத்தில் அமைந்துள்ள மவூத் அகாடெமி என்ற கல்வி நிறுவனத்தில், கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பெரும்பாலும் ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தங்கியிருக்கும் அந்த பகுதியில் இந்தக் கொடூர தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது. இதனால் பள்ளிகளுக்கு பிள்ளைகளை அனுப்ப பெற்றோர்கள் மறுக்கின்றனர்.

இந்த நிலையில் அங்கு நாடு முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சர் வாயிஸ் அகமது கூறும்போது, ”க”ல்வி நிறுவனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது, இப்போது நமது நாடு சந்தித்து வருகிற மிக பயங்கரமான தாக்குதல்கள் என்றுதான் கூற வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Sharing is caring!