பருவமழை கணித்தபடியே தொடங்கும்… வானிலை மையம் அறிவிப்பு

சென்னை:
பருவமழை கணித்தபடியே துவங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்க மூன்று நாட்களே உள்ள நிலையில், தென் மேற்கு பருவ காற்று திசை மாறி, கிழக்கில் இருந்து வீச துவங்கியுள்ளது. இதனால் பருவமழை கணித்தபடி துவங்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை, மே 29 முதல், அக்., 21 வரை, 146 நாட்கள் பெய்துள்ளது. இந்த மழை இயல்பான கால கட்டமான, செப்., 30 வரை, 91 சதவீதம் பெய்துள்ளது. தென் மாநிலங்களில், இயல்பான அளவை விட, 3 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. தென் மேற்கு பருவமழை காலத்தில், அக்., 21 வரையில், சாகர், மேகுனு, தயே, லுாபன் மற்றும் தித்லி ஆகிய, ஐந்து புயல்களும், ஐந்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் உருவாகின.

இந்த மழை, நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, நேற்று முதல், காற்றின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென் மேற்கில் இருந்து காற்று வீசுவது மாறி, வட கிழக்கு மற்றும் வட மேற்கில் இருந்து, காற்று வீச துவங்கிஉள்ளது.

எனவே இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ‘இன்று, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில், மிதமான மழை பெய்யும். அடுத்து வரும் 2 நாட்களுக்கு, கனமழை எச்சரிக்கை எதுவும் இல்லை’. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!