பாகிஸ்தானின் புதிய பிரதமர் முன்னாள் கிரிக்கட் வீரர் இம்ரான் கான்

பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் கிரிக்கட் வீரரும் பாகிஸ்தான் டெஹ்ரிப் இ இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

மொத்த 272 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மைக்கு 137 தொகுதிகளில் வெற்றி பெறவேண்டிய நிலையில், 115 தொகுதிகளை கைப்பற்றி, இம்ரான் கான் வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனிடையே, 2 தேர்தல் தொகுதிகளின் முடிவுகளை அந்நாட்டுத் தேர்தல் ஆணையகம் தமற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பாகிஸ்தானில் கடந்த 25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி , பெனாஸிர் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் டெஹ்ரிப் இ இன்சாப் ஆகிய கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், 64 தொகுதிகளை கைப்பற்றிய பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியும் 43 தொகுதிகளை கைப்பற்றிய பாகிஸ்தான் மக்கள் கட்சியும் தேர்தல் முடிவுகளை புறக்கணிப்பதாகவும் மீள் தேர்தல் நடத்துமாறும் கோரிக்கை விடுத்துள்ளன.

தேர்தலில், இம்ரான் கான் வெற்றி பெற்றமையினூடாக 2 தசாப்தங்களாக பாகிஸ்தானில் ஆட்சியமைத்த இரு பிரதான கட்சிகள் பின்தள்ளப்பட்டுள்ளன.

அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ள இம்ரான் கான், ஏனைய சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியின் முன்னாள் தலைவரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப், ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!