பாஜ ரத யாத்திரைக்கு தடை விதித்த கொல்கத்தா நீதிமன்றம்

கொல்கத்தா:
பாஜ ரத யாத்திரைக்கு தடை விதித்து கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் ரத யாத்திரை நடத்த பாஜவுக்கு தடை விதித்து கொல்கத்தா உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

பாஜ ரத யாத்திரைக்கு தனி நீதிபதி அனுமதி அளித்த நிலையில், அந்த அனுமதியை நிறுத்தி வைத்தும், மாநில அரசின் அளித்த அறிக்கையை ஆய்வு செய்யக்கோரியும் தனி நீதிபதிக்கு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மூவர் அடங்கிய குழு, புலனாய்வு துறை அறிக்கையை சுட்டிக் காட்டி, பாஜ ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்ததை ரத்து செய்து கொல்கத்தா உயர்நீதிமன்ற தனிநீதிபதி தபாப்ரதா சக்ரவர்த்தி உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கு வங்க மாநில அரசு இருநீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தேபாஷிஷ் கர்குப்தா, நீதிபதி ஷாம்பா சர்கார் அடங்கிய அமர்வு மேற்கு வங்க அரசின் மேல்முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து  இது தொடர்பாக மனுதாரரான பாஜவினருக்கு அரசு தந்த பதில் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணையின் போது, நீதிபதிகள் “இந்த வழக்கை முன்பு விசாரித்த நீதிபதி தபாப்ரதா சக்கரவர்த்திக்கு மீண்டும் அனுப்பி வைக்கிறோம். மாநில உளவுத்துறை அளித்த தகவல்கள், அறிக்கைகள், எச்சரிக்கைகள் ஆகியவற்றை நீதிபதி ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும். அதுவரை  ரத யாத்திரை நடத்த பாஜவுக்கு தடை விதிக்கப்படுகிறது “ என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து, பாஜவின் ரத யாத்திரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து பாஜ சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!