பாபநாசத்தில் பயங்கர தீவிபத்து; 12 கூரை வீடுகள் சாம்பல்

பாபநாசம்:
பாபநாசத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில் ஒரு வீட்டில் இருந்து வெடித்து சிதறிய செங்கல் தாக்கியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காயம் அடைந்தார்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் கீழவங்காரம்பேட்டை முஸ்லிம் தெருவில் ஏராளமான கூரை வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் (70). இவருடைய வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக வீட்டு கூரையில் தீப்பிடித்தது.

இந்த தீ மளமளவென அருகில் இருந்த 11 பேரின் வீடுகளுக்கும் பரவியது. இந்த தீ விபத்தில் அப்துல் லத்தீப், பாத்திமா பீவி ஆகியோர் உள்பட 12 பேரின் கூரை வீடுகள் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிந்ததாலும், வீடுகளில் இருந்த 4 கியாஸ் சிலிண்டர்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதாலும் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த பாபநாசம், தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய அதிகாரிகள் ராமசுப்பிரமணியன், முத்துகுமார், திலகர் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் 3 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதனிடையே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த ஒரு வீட்டில் இருந்து வெடித்து சிதறிய செங்கல், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாபநாசம் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் என்பவருடைய முதுகில் பட்டது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
உடன் அவர் பாபநாசம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த தீவிபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. தீ விபத்து நடந்த பகுதியை கலெக்டர் அண்ணாதுரை நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!