பாபநாசத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பாபநாசம்:
முழுமையாக தூர்வார வேண்டும், மானிய விலையில் விதை நெல், உரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பாபநாசத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல், உரம் வழங்க வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். நுகர் பொருள் வாணிப கழக நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் சிறு, குறு மற்றும் தினக்கூலி விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் பாபநாசம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பெருமாள், மாவட்ட தலைவர் இளங்கோவன், பாபநாசம் ஒன்றிய செயலாளர் அன்பழகன், பாபநாசம் ஒன்றிய தலைவர் ஜெயராமன், மற்றும் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!