பிண அறை குளிர்சாதன பெட்டியில் உயிருடன்……

தென் ஆப்ரிக்காவில் கடந்த மாதம் 24ம் தேதி ஒரு கார் விபத்தில் சிக்கியது. காரில் இருந்தவர்களில் 2 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மற்றொரு பெண்ணும் படுகாயமடைந்தார்.

டிஸ்ட்ரஸ் அலர்ட் என்ற ஆம்புலன்ஸ் நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் மூலம் அந்த பெண் மீட்கப்பட்டு கவுடெங் மாகாணத்தில் உள்ள கார்லேடோன்வில்லா பிணவறைக்கு கொண்டு வரப்பட்டது. அந்த பெண் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டு பிண அறையில் உள்ள குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது.

பின்னர் பிண அறை ஊழியர் ஒருவர் உடலை பரிசோதனை செய்வதற்காக குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது அந்த பெண் மூச்சு விடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அந்த பெண் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

இது குறித்த விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தங்களது நிறுவன ஊழியர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளும் பயிற்சி அளிக்கப்படவில்லை. எங்களது தரப்பில் எந்தவித தவறும் இல்லை என்று ஆம்புலன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், தென் ஆப்ரிக்காவில் இது போன்று நடப்பது முதன் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த ஜனவரியில் ஸ்பெயின் ஆஸ்துரியா பிராந்தியத்தை சேர்ந்த ஒரு கைதி பிரேத பரிசோதனை செய்யும் நேரத்தில் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

7 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு கேப் பிரேத பரிசோதனை அறையில் 50 வயது ஆண் ஒருவர் பிணவறையில் உயிருடன் எழுந்து உட்கார்ந்தார். 2016ம் ஆண்டில் குவாழுலு நாடால் பகுதியில் சாலை விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட நபர் மறுநாள் உயிருடன் எழுந்தார்.

Sharing is caring!