பிரதமர் தெரசா மே தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ளார்

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது தலைமை மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ளவுள்ளார்.

பிரதமரின் இல்லமான 10 டவுனிங் ஸ்டீரிட்டில் இருந்து வெளியான அறிக்கையில், தன்னுடைய முழு பலத்தோடு இந்த போட்டியை எதிர்கொள்ளப் போவதாக தெரசா மே கூறியுள்ளார்.

புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டால் 2019 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதிக்குள் பிரிட்டனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றுகின்ற பொறிமுறையான 50 ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்ய வேண்டும் அல்லது அதன் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்று தெரசா மே கூறியுள்ளார்.

இதனால் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தாமதமாகும் அல்லது நிறுத்தப்படும் என்று தெரசா மே கூறியுள்ளார்.

பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் வாக்களிக்கவுள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவரை மாற்றுவது நாட்டின் எதிர்காலத்தை ஆபத்திற்குள்ளாக்கும், பிரிட்டனால் தாங்கிக்கொள்ள முடியாத ஸ்திரமின்மையை உருவாக்கும் என்றும் பிரதமர் தெரசா மே கூறியுள்ளார்.

பிரதமர் தெரசா மே மீதான இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை சந்திப்பதற்கு தேவையான 48 கடிதங்களை பெற்ற பின்னர், பிரதமர் பதவிக்கு இந்த சவால் எழுந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பிரிட்டனில் பெரும்பாலான மக்கள் ஆதரவாக வாக்களித்ததை தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் போது தெரசா மே பிரதமராக பதவியேற்றார்.

அதன் பின்னர் அவர் நடத்திய பிரெக்ஸிட் பேச்சுவார்த்தையால் அவரது கட்சிக்குள்ளேயே தெரசா மே விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

Sharing is caring!