பிரதமர் மோடியின் 68 ஆம் பிறந்த நாள்

பிரதமர் மோடியின் 68 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர்கள் 568 கிலோ எடையுள்ள லட்டு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

பிரதமர் மோடியின் 68 ஆவது பிறந்த நாள் விழா நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது. மோடி அறிவித்த முக்கிய திட்டங்களில் தூய்மை இந்தியா திட்டமும் ஒன்றாகும். இதை ஒட்டி மோடியின் பிறந்த தினம் நேற்று தூய்மை தினமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாக் கொண்டாட்டத்தை சமூக சேவை நிறுவனமான சுலப் இண்டர்நேஷனல் நடத்தியது.

விழாவில் மத்திய அமைச்ச்ர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கலந்துக் கொண்டனர். அவர்கள் இணைந்து மோடியின் 68 ஆம் பிறந்த நாளை குறிக்கும் வகையில் 568 கிலோ எடை கொண்ட லட்டு ஒன்றை வெளியிட்டனர். அதன் பிறகு இருவரும் மோடியின் பிறந்த நாளை ஒட்டி அவரை புகழ்ந்து உரையாற்றினார்கள்.

அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “மோடியின் பிரம்மாண்ட திட்டங்களில் தூய்மை இந்தியா திட்டம் ஒன்றாகும். சுதந்திரம் அடைந்து 60-62 வருடம் ஆகியும் நாட்டில் 30% மக்களுக்கு மட்டுமே கழிப்பறை வசதி இருந்தது. மோடி தனது நான்காண்டு ஆட்சிக் காலத்தில் அதை 90% ஆக மாற்றி உள்ளார்” என கூறினார்.

மத்திய அமைச்சர் முகமது அப்பாஸ் நக்வி, “தூய்மை இந்தியா மூலம் வலுவான இந்தியாவை உருவாக்க மோடி முயன்று வருகிறார். இந்த திட்டம் அரசுக்கு மட்டுமின்றி பொது மக்களுக்கும் பெருமை சேர்க்கும் திட்டமாகும்” என கூறினார்.

Sharing is caring!