பிரிட்டன் நாட்டு பவுண்ட் நோட்டில் இடம் பெற இந்திய விஞ்ஞானி பெயரும் பரிந்துரை

லண்டன்:
பிரிட்டன் நாட்டு புதிய 50 பவுண்ட் நோட்டில் இடம் பெற இந்திய விஞ்ஞானியின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் புதிதாக வெளியிடப்பட உள்ள, 50 பவுண்டு மதிப்புள்ள நோட்டுகளில், பிரபல விஞ்ஞானியின் பெயர், படம் இடம்பெற உள்ளது. இதற்காக, இந்திய இயற்பியல் விஞ்ஞானி, சர் ஜகதீஷ் சந்திர போஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 5 மற்றும் 10 பவுண்டுகள் மதிப்பு உடைய புதிய நோட்டுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அடுத்ததாக, 20 பவுண்டு நோட்டு, வரும், 2020ல் வெளியிடப்பட உள்ளது. அதன் பின், 2020ல், புதிய வடிவில், 50 பவுண்டு நோட்டு அச்சடிக்கப்பட உள்ளது.

புதிய, 50 பவுண்டு நோட்டில், பிரிட்டனின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவிய விஞ்ஞானியின் பெயர் மற்றும் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி, அரசு கோரியிருந்தது.

அதன்படி இதுவரை, 1.74 லட்சம் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் மறைந்த பிரபல விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், வேதியியல் விஞ்ஞானியான முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில், இந்தியாவைச் சேர்ந்த, பிரபல இயற்பியல் விஞ்ஞானியான, சர் ஜகதீஷ் சந்திர போஸ் பெயரும் இடம்பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியின்போது, இந்தியாவில் பல்வேறு ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். தாவரங்கள் தொடர்பான ஆய்வுகளை அவர் மேற்கொண்டார். மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா மற்றும் பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்த அவர், கோல்கட்டாவில் கல்வி நிறுவனத்தையும் நடத்தினார்.

புதிய, 50 பவுண்டு நோட்டுக்கான பெயர்களை பரிந்துரைக்க, டிச., 14ம் கடைசி தேதி. அதன் பின், யாருடைய பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது அறிவிக்கப்பட உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!