பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் திருட்டு

பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் பயணம் செய்தவர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

உலகின் மிகப்பெரிய விமான சேவை நிறுவனங்களில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனமும் ஒன்றாகும். இந்த நிறுவன விமான சேவைகளுக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த நிறுவனம் பல விதங்களில் பயணிகளின் அதிருப்திக்கு உள்ளாகி வருகிறது.கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் இந்த நிறுவனத்தின் கணினியில் ஏற்பட்ட கோளாறுகளின் காரணமாக பல விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதில் பயணம் செய்ய இருந்த நூற்றுக் கணக்கான பயணிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகினர். இதே நிலை மீண்டும் இந்த வருடம் ஜூலை மாதம் நிகழ்ந்தது.

அப்போதிலிருந்தே இந்த விமான நிறுவன கணினி சேவைகள் குறித்து பல சந்தேகங்கள் எழுந்தன. தற்போது இந்த நிறுவன விமானங்களில் பயணம் புரிந்த பயணிகளின் விவரங்கள் அனைத்தும் கணினி பதிவில் இருந்து திருடப்பட்டதாக பிரிட்டன் அரசின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான பிபிசி தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 25 ஆம் தேதியும் இந்த மாதம் 5ஆம் தேதியும் இருமுறை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகவலை பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவன தலைவர் அலெக்ஸ் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் தனது அறிக்கையில்<”பயணிகள் விவரங்கள் திருடப்பட்டதற்கு நிறுவனம் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. இது குறித்த விசாரணைக்கு நாங்கள் உத்தரவிட்டுள்ளோம். அத்துடன் பயணிகளின் விவரங்கள் திருடப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!