புத்தாண்டின் போது போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

திருச்சி:
புத்தாண்டு கொண்டாட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

புத்தாண்டை ஒட்டி ஐகோர்ட் அறிவுறுத்தலின்படி சில முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் மது அருந்தி விட்டு வாகனங்களை ஓட்டுவது, ஆபத்தான வகையில் அதிவேகமாக ஓட்டுவது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், கேலி செய்தல் போன்றவற்றில் ஈடுபட கூடாது.

நகரின் அனைத்து பகுதிகளிலும் போலீஸ் ரோந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் பணியில் இருப்பர். போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து மத வழிப்பாட்டு இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும். புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு செய்பவர்கள் குறித்து அவசர தொலைபேசி எண்.100 மற்றும் 2331929, 9498810615 என்ற எண்களில் தகவல் அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!