புயலில் படகுடன் அடித்துச்செல்லப்பட்ட மீனவர் 49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்

இந்தோனேசியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட புயலில் படகுடன் அடித்துச்செல்லப்பட்ட மீனவர் 49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் சுலாவேசி தீவைச் சேர்ந்தவர் ஆல்டிநோவல் அடிலாங் (19). இவர் படகில் இருந்தபடி மீன்களைப் பிடித்து விற்று வருகிறார். சில கம்பெனிகள் நேரடியாக வந்து அவரிடமிருந்து மீன்களை விலைக்கு வாங்கிச்செல்கின்றன.

கடந்த ஜூலை மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட புயலில் அவரது படகு அடித்துச்செல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவர் கடலில் தனியாக பயணம் செய்து கொண்டே இருந்தார்.

49 நாட்கள் தொடர்ந்து பயணம் செய்த அவர் ஜப்பான் கடற்கரையைச் சென்றடைந்தார். வழியில் 10-க்கும் மேற்பட்ட கப்பல்கள் கடந்து சென்றுள்ளன. அவர்களிடம் உதவி கோரியுள்ளார். ஆனால், யாரும் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை.

9 நாட்களுக்கு பிறகு பனாமா நாட்டு டேங்கர் கப்பலுக்கு ரேடியோ சிக்னல் கொடுத்து தான் ஆபத்தில் இருப்பதை உணர்த்தியுள்ளார். அவர்கள் அடிலாங்கை உயிருடன் மீட்டு ஜப்பான் அழைத்துச்சென்றுள்ளனர். அங்கிருந்து அவர் இந்தோனேசியாவில் உள்ள தனது சொந்த ஊரான மனாடோவுக்கு சென்றுள்ளார்.

கடலில் தனியாக பயணம் செய்த காலத்தில் மீன்களைப் பிடித்து அவற்றை படகு வீட்டின் கட்டைகளை விறகாக்கி சமைத்து சாப்பிட்டு உயிர் பிழைத்ததாகக் கூறியுள்ளார்.

கடல் நீரை துணியால் வடிகட்டி சிறிது உப்பை அகற்றி தண்ணீர் குடித்து உயிர் பிழைத்ததாகவும் கூறியுள்ளார்.

Sharing is caring!