புஸ்வாணம், சரவெடி, மத்தாப்பு கொளுத்தலாமா? கோர்ட் உத்தரவு என்ன சொல்கிறது..!

புதுடில்லி:
புஸ்வாணம், சரவெடி, மத்தாப்பு கொளுத்த வாய்ப்பு இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பட்டாசு தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பின் மூலம், சரவெடி, மத்தாப்பு, புஸ்வாணம் கொளுத்த முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை இரண்டு மணி நேரத்திற்கு மட்டும்; கிறிஸ்துமஸ், புத்தாண்டு அன்று இரவு 11.55 முதல் 12.30 மணி வரை 35 நிமிடங்களுக்கு மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

அத்துடன் பட்டாசு உற்பத்தி தொடர்பாகவும் பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது. பட்டாசு வழக்கில் 2016ம் ஆண்டே சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி டில்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால், சிவகாசியில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

2017 ம் ஆண்டு ஜூலை, 31ம் தேதி லித்தியம், பாதரசம், ஆர்சானிக் மற்றும் காரீயம் உட்பட ஐந்து ரசாயனங்களை பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்த தடை விதித்தது. அதே ஆண்டு செப்டம்பரில், ஸ்ட்ரோனியம் குளோரைடு பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி அதிக சத்தம் மற்றும் ஒளியை வெளிப்படுத்தும் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட ஐந்து ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், சரவெடி போன்ற பட்டாசுகள், பச்சை நிற ஒளியை வெளிப்படுத்த உதவும் பேரியம் சால்ட் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகள், அதிக சத்தம் மற்றும் ஒளியை வெளிப்படுத்தும் பட்டாசுகள், உலர வைக்கும் தன்மைக்காக சாம்பலை கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசுகள், பெட்ரோலியம் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பு அமைப்பு எனப்படும் பி.இ.எஸ்.ஓ., அமைப்பால் வரையறைக்கப்பட்டதை விட கூடுதல் அளவு கரி கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தாமிரம், கேட்மியம், காரீயம், மாங்கனீஸ், துத்தநாகம் சோடியம் மற்றும் பொட்டாசியம் கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 டெசிபல் அளவுக்கு மேல் சத்தத்தை ஏற்படுத்தும் பட்டாசுகள், வெள்ளை நிற வெளிச்சத்தை ஏற்படுத்தும் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவு புகையை வெளிப்படுத்தும் பசுமை பட்டாசுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சரவெடி, மத்தாப்பு, புஸ்வாணம் போன்ற பட்டாசுகளை கூட கொளுத்த முடியாத நிலை உருவாகி உள்ளதாக கருதப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!