பெண்களை அனுமதித்தால் சன்னிதானத்தை மூடுங்க… பந்தளம் மன்னர் வேண்டுகோள்

திருவனந்தபுரம்:
சபரிமலை சன்னிதானத்திற்குள் பெண்களை அனுமதித்தால், சன்னிதானத்தை மூட வேண்டும் என பந்தளம் மன்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

தெலுங்கானா தனியார் டிவி.,யின் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் கொச்சியை சேர்ந்த பெண் பக்தர் ஒருவரும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை சென்றனர்.

200 க்கும் மேற்பட்ட போலீசார் புடைசூழ, தலைகவசம் அணிந்து, போலீஸ் உடையில் அவர்கள் நடைபந்தல் பகுதியை அடைந்தனர். சன்னிதானத்திற்கு அருகே செல்ல முயன்ற அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் நுழையும் வழியில் அமர்ந்து தர்ணா செய்தனர்.

கவிதா மற்றும் போராட்டம் நடத்தும் பக்தர்களுடனும் ஐஜி ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதற்கிடையில் நிருபர்களிடம் பேசிய கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை வழிபாடு நடத்துவதற்கான இடம் மட்டுமே. போராட்டம் நடத்துவதற்கான இடமல்ல. போராட்டக்காரர்கள் தங்களை நிரூபிப்பதற்கான இடமும் இதுவல்ல.

கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர போராட்ட எண்ணம் உடையவர்களை அனுமதிப்பதல்ல. அந்த இரு பெண்களுள் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர். மற்றொருவர் செய்தியாளர். இது லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சன்னிதானத்திற்குள் பெண்களை அனுமதித்தால், சன்னிதானத்தை மூட வேண்டும் என்று பந்தளம் மன்னர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சபரிமலைக்கு சென்றுள்ள ஒரு பெண் கொச்சியை சேர்ந்த பெண்ணிய போராளி. இவரது கொச்சி வீட்டை, சபரிமலை பேராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர். இதுவும் தற்போது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!