பெரியாருக்கும் இதே சட்ட சிக்கல்…கருணாநிதி கையாண்ட விதம் எப்படி?

திமுக தலைவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி உடலை நல்லடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் அண்ணாவின் நினைவிடம் அருகே இடம் தர தமிழக அரசு சட்ட சிக்கலை காட்டி மறுப்பு தெரிவித்துள்ளது.

கருணாநிதி இறப்புக்கு தமிழகமே சோர்ந்து இருக்க, மறுபக்கம் மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்ற போராட்டமும் மக்கள் போராட்டமும் என சிக்கலான  சூழல் நிலவுகிறது.

மெரினாவில் நினைவு இடம் இருப்பதற்கு எதிரான சில வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் குறிப்பிட்டு சர்தார் படேல் சாலையில் காமராஜர் நினைவகம் அருகே இடம் ஒதுக்கப்படுவதாகவும் அரசு அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல் என கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதே நிலை, அன்று 1973ஆம் ஆண்டு, பெரியார் வயது மூப்பாலும் நோயினாலும் காலமான போதும் ஏற்பட்டது. அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதி, பெரியாருக்கு அரசு மரியாதை செய்ய விரும்பி அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆணையிட்டார்.

ஆனால் அப்போது தமிழக அரசின் தலைமை செயலாளராக இருந்த சபாநாயகம், இதற்கு சட்டத்தில் இடமில்லை என்றார். ஏன் இடமில்லை? என்று காட்டமான கருணாநிதியிடம், “பெரியார் எந்த அரசு பதவியும் வகிக்கவில்லை. அதனால் அவருக்கு அரசு மரியாதை கொடுக்க முடியாது என்றார் சபாநாயகம்.

கடும் கோபமடைந்த கருணாநிதி, “காந்தி எந்தப் பதவியில் இருந்தார்.  மகாத்மா காந்தி மரணமடைந்த போது குண்டு முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டதே?” என்று கேட்டார். சபாநாயகம், பதில் சொல்ல திணறினார். பின், “அவர் இந்த தேசத்தின் தந்தை (Father of our nation)” என்றார்.

பதிலுக்கு கருணாநிதி, “பெரியார் ஃபாதர் ஆஃப் தமிழ்நாடு… அவருக்கு அரசு மரியாதை தரப்பட வேண்டும்” என்றார் திட்டவட்டமாக. இன்றும் இதே போலான வாதங்கள் தான் கருணாநிதிக்கு இடம் கேட்டு முன்வைக்கப்படுகிறது.

Sharing is caring!