பைக் திருடிவிட்டு கண்காணிப்பு கேமராவை திருப்பி வைத்து சென்ற புத்திசாலி (?) திருடர்கள்

சென்னை:
புத்திசாலி திருடர்கள்? என்று தலையில் அடித்து கொள்ளலாம். அட என்ன கூத்து தெரியுங்களா?

சென்னை ஐஸ் ஹவுஸ் ஹாஜி ஷேக் உசேன் தெருவில் கடந்த 17-ம் தேதி ஒரு பைக்  காணாமல் போனது. இதுகுறித்து ஐஸ்ஹவுஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது பைக் நிறுத்தியிருந்த இடத்திற்கு எதிரில் உள்ள கட்டிடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா வானத்தை நோக்கி இருந்தது. எங்கும் இல்லாத புதுமையாக கண்காணிப்பு கேமரா இப்படி இருந்ததால் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

உடன் அந்த கேமராவில் இருந்த பதிவுகளை சோதனை செய்தனர்.
அதில் திருட்டு நடந்த அன்று நள்ளிரவு 4 இளைஞர்கள் வருவதும் அவர்கள் அங்குள்ள பைக்குகளை நோட்டமிட்டு அதில் விலை அதிகமுள்ள டியோ பைக்கை  திருட தேர்வு செய்கின்றனர்.

அந்த பைக் மற்ற 2 பைக்குகளுக்கு நடுவே இருந்ததால் மற்றவற்றை நகர்த்துகின்றனர். அதில் ஒருவர் தற்செயலாக கண்காணிப்பு கேமரா இருப்பதை பார்க்கிறார். உடன் தன் நண்பர்களிடம் கேமராவை காட்டுகிறார். பின்னர் கூடிப்பேசிய அவர்களில் ஒருவன் கேமராவை வானத்தை நோக்கி திருப்பி வைக்கிறான்.

இது எல்லாம் தெளிவாக பதிவாகி உள்ளது. கேமராவை திருப்பும் முன் நடந்த காட்சிகள் பதிவாகியிருக்கும் என்பதை உணராத திருடர்கள். இந்த காட்சிகளை வைத்து போலீசார் அந்த புத்திசாலி திருடர்களை தேடி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!